பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு பாகிஸ்தான் இன்னும் இந்தியாவுடன் ஒத்துழைக்க விரும்புகிறது. அதுதான் அமைதிக்கான ஒரே சாத்தியமான பாதை என பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து இந்திய தரப்பின் நியாயத்தை எடுத்துரைக்க காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தலைமையிலான இந்திய அனைத்துக் கட்சிக் குழு வாஷிங்டனுக்கு வந்துள்ள நாளில், பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் குழுவும் தங்கள் தரப்பின் கருத்தை எடுத்துரைக்க நியூயார்க் வந்துள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சரான பிலாவல் பூட்டோ, நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடந்த ஒரு மாநாட்டில் உரையாற்றினார்.
இதன்போது “ மக்களின் தலைவிதியை அரசு சாராதவர்கள் மற்றும் பயங்கரவாதிகளின் கைகளில் விட்டுவிட முடியாது. இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கு இடையே தகராறை தீர்க்கும் வழிமுறைகள் இல்லாமல் இருக்க முடியாது.
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் இந்திய உளவு அமைப்பான ரா ஆகியவை அமர்ந்து பேசி பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடத் தயாராக இருந்தால், இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் பயங்கரவாதம் கணிசமாகக் குறைவதைக் காண்போம் என்று நான் முழுமையாக நம்புகிறேன்” என்று பிலாவல் பூட்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.