” பஸில் ராஜபக்சவின் வருகையால் எதிரணிகள் பீதியில் உள்ளன. அதனால்தான் அவருக்கு எதிராக சேறுபூசும் பரப்புரைகள் முன்னெடுக்கப்படுகின்றன.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பஸில் ராஜபக்ச செல்லாக் காசாகிவிட்டார், அவரால் முடியாது என சூளுரைத்து வந்த எதிர்க்கட்சிகள், அவரின் வருகையால் கலக்கமடைந்துள்ளன. மண்ணெண்ணெய் பட்ட பாம்புபோல துடிக்கின்றன. பஸிலுக்கு எதற்காக இவ்வளவு பயம்? அவர் செல்லாக் காசெனில் எதற்காக அஞ்ச வேண்டும்?
பொய்கள் புயல்போல் வீசும். உண்மைதான் வெல்லும். அதற்கு காலம் செல்லும். அந்தவகையில் பஸில் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பது தெரியவரும். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தாலும், மொட்டு கட்சிக்கு பஸில் ராஜபக்சவே தலைமைத்துவம் வழங்குவார்.” – எனவும் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டார்.
