-பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க
“நாட்டின் அனதை்து இன மக்களும் ஜனாதிபதியை ஆதரிக்க தீர்மானித்துள்ளனர். கடந்த இரு வருடங்களில் மின்சாரம், கேஸ், சம்பளம் இல்லாமல் தவித்த மக்களுக்கு ஜனாதிபதி எவ்வாறு தீர்வு வழங்கினார் என்பதை மக்கள் அறிவர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்றிருக்காவிட்டால், பங்களாதேஷ் போன்ற நிலைமை இலங்கையில் ஏற்பட்டிருக்கும். அன்று ஜே.வி.பி. பாராளுமன்றத்தையும் சுற்றி வளைக்க முட்பட்டது. 2 வருடங்களுக்கு முன்பே இலங்கையை பங்களாதேஷ் போன்று நெருக்கடிக்குள் தள்ளுவதே அவர்களின் நோக்கமாக இருந்தது.
மக்கள் பிரச்சினைகளுக்கு பேச்சளவில் இல்லாமல் நடைமுறையில் தீர்வு வழங்கியுள்ளார். கடந்த இரு வருடங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்த வேலைத்திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும்.” என்றார்.
-இராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க
“நாங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான மேடைகளிலேயே அதிகமாக அமர்ந்திருக்கிறோம். ஆனால் கடந்த இரு வருடங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகளைப் பார்த்த பின்னர் அவரை மேலும் பலப்படுத்த தீர்மானித்தோம்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 70 இலட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றிபெறுவார்.” என்றார்.
-முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ,
”2 வருடங்களுக்கு முன்னர் தம்புள்ள பொருளாதார நிலையம் இருந்த நிலையை சற்று நினைத்துப் பாருங்கள். ரணில் விக்ரமசிங்க 5 கூட்டங்கள் மாத்திரம் தான் நடத்தியுள்ளார். தற்போது முதலிடத்தில் அவர் தான் இருக்கிறார். 90 கூட்டங்கள் நடைபெற இருக்கிறன. அவை நடந்து முடியும்போது 70 இலட்சம் வாக்குகளை ரணில் விக்ரமசிங்க பெறுவார். அவர் சொல்வதை சற்று மெருகூட்டி சஜித் சொல்கிறார். இன்னும் அவருக்கு ரணில் தான் தலைவர். முதுகெலும்புள்ளவர் தான் தலைவர். சவால்களை ஏற்கும் நபர்தான் தலைவர்.
இது பரீட்சார்த்தமாக செய்து பார்க்கும் சந்தர்பமல்ல. அஸ்வெசும, உறுமய திட்டத்தை தொடர்வீர்களா என்பதை சஜித்தும் அநுரவும் இதுவரை சொல்லவில்லை. அந்தத் திட்டங்களைத் தொடர ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவாக வேண்டும். கேஸ் சிலிண்டரைப் பயன்படுத்தி தேநீர் அருந்தி விட்டுத்தான் அனைவருக்கும் தேர்தல் தினத்தில் வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும்.” என்றார்.
-இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன்:
‘தம்புள்ள என்பது முடியாது என்றவற்றை முடியும் என்று மாற்றிய பூமியாகும். கொரோனாவின் போது முழு நாடும் மூடப்பட்டிருந்த வேளை பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து உண்பதற்குக் கொடுத்த பிரதேசம் இது. ஒருநாளும் இணைய முடியாது என்று கூறப்பட்ட 75 வருடங்கள் ஐ.தே.கவும் எமது கட்சியும் பிளவுபட்டன. தொடர்ச்சியான பிரச்சினைகள் எம்மை இணைத்தது. அதனால் தான் நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க முடிந்தது.
தமது அரசியல் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் நாட்டின் பிரச்சினைகளை இரட்டிப்பாக்குவதற்கு ஏனைய தலைவர்கள் முயன்றார்கள். எம்மை இணைத்துக் கொண்டு ரணில் விக்ரமசிங்க நாட்டை மீட்டெடுத்தார். நாம் கடுமையாக முடிவை எடுத்து உங்களை ஆதரித்தோம். எமது மக்களும் அவ்வாறே உங்களை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர். தப்பி ஓடுபவனுக்கு இராணுவத்தில் மரியாதையில்லை. எமது அரசியல் தலைவர்களிடையே தப்பி ஓடாத பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கிய தலைவர் ரணில் விக்ரமசிங்க மட்டுமே. பயந்தாங்கொள்ளிகளுக்குப் பின்னால் செல்ல முடியாது.” என்றார்.