பாடசாலைகளை வைத்தும் , பாடசாலைகளில் இடம்பெறும் நிகழ்வுகளின்போதும் அரசியல் முன்னெடுப்பதை , அரசியல்வாதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்து தற்போது மேலோங்கியுள்ளது.
குறிப்பாக கடந்த சில நாட்களாக பாடசாலைகளில் இடம்பெறும் திறப்பு விழா, பரிசளிப்பு விழா ஆகியவற்றில் அரசியல்வாதிகள் பங்கேற்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுவருகின்றது.
இந்நிலையில் மலையகத்திலும், எதிர்வரும் காலங்களில் பாடசாலை நிகழ்வுகளுக்கு , அரசியல்வாதிகளை சிறப்பு விருந்தினர்களாக அழைக்கக்கூடாது என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலை அதிபர்கள் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என இளைஞர்கள் கருதுகின்றனர்.
அதேவேளை, மக்களின் வரிப்பணம் மூலம் அரசால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களில் அரசியல்வாதிகளின் படங்களுடன் கூடிய பதாதைகள் காட்சிப்படுத்தப்படக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்களின் தற்போதைய தன்னெழுச்சி போராட்டத்தின் பின்னர், இவ்வாறு பல மாற்றங்கள் சமூகத்தில் ஏற்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக கல்விசார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.