விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதுள்ள பாணதுறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பகுதியில் முறையான ஆய்விற்கு பின்னர் விரைவாக மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேற்று (11) ஆலோசனை வழங்கினார்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சுற்றுச்சூழல், மீன்வளம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தி, கப்பல் தீயினால் ஏற்பட்ட சேதங்களை முழுமையாக மதிப்பிடவும், சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திடமிருந்து முழு இழப்பீட்டைப் பெறுவதற்கும், கப்பலை வெளியேற்றுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் பிரதமர் இதன்போது அறிவுறுத்தினார்.
சம்பந்தப்பட்ட சட்ட நடவடிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் தலைமையில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அறிவித்தார்.
கொவிட் தொற்று நிலைமை காரணமாக குறைந்த வருமானம் பெறுவோருக்கு வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவை கப்பல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மீனவ சமூகத்தினருக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழங்கப்படும் எனவும் கௌரவ பிரதமர் இதன்போது தெரிவித்தார்.