பசறை, கோணக்கலை தோட்டத்தில் பாம்பு தீண்டி பெண் தோட்டத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கோரியும், தமக்கான தொழில் பாதுகாப்புகளை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும் தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், தேயிலை மலைகளில் உள்ள பாம்பு புற்றுகளை அகற்றுமாறும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கோணக்கலை தோட்டத்தின் 5 பிரிவுகளைச் சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். பசறை 10 ம் கட்டை பகுதியில் பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோட்ட வைத்தியசாலைக்கு வைத்தியர் ஒருவரை நியமிக்குமாறும் வலியுறுத்தினர்.

கடந்த 16 ம் திகதி கோணக்கலை கீழ் பிரிவைச் சேர்ந்த 56 வயதுடைய பெண் தொழிலாளி ஒருவர் கொழுந்து பறித்து கொண்டிருந்தவேளை பாம்பு தீண்டலுக்கு உள்ளானார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார்.

மரணித்த பெண்ணின் சடலம் இன்று மாலை 3 மணியளவில் கோணக்கலை கீழ் பிரிவு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
ராமு தனராஜா
