தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இருவர் எதிராக வாக்களித்தாலேயே பாதீடு தோல்வியடைந்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சபைத் தலைவர் லச்சுமன் பாரதிதாசனினால், முன்வைக்கப்பட்டது.
14 ஆயிரம் கோடியே 43 இலட்சத்து இருபத்து ஆயிரத்து 60 ரூபா மதிப்பிலான 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடு நகர சபையில் இன்று (07.12.2021) சமர்பிக்கப்பட்டது.
இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் சந்தன குணதிலக மற்றும் பிரசன்ன விதானகே ஆகியோர் வாக்களித்தனர்.
இதனால் வரவு செலவுத் திட்டம் 5 க்கு 4 என்ற பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
தலவாக்கலை – லிந்துலை நகர சபையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று உறுப்பினர்களும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூன்று உறுப்பினர்களும், சுயேட்சை குழுக்கள் சார்பில் இரண்டு உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் உள்ளனர்.
இவர்களில் சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் சுயேட்சை குழு உறுப்பினர் இன்று (07) சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை.
அடுத்து வரும் இரு வாரங்களுக்குள் தலவாக்கலை நகர சபையின் தலைவர் மீண்டும் ஒரு வரவு செலவு திட்டத்தின் மீதான வாக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் அவ்வாறு தவறும்பட்சத்தில் உள்ளூராட்சி மன்ற ஆணையாளரின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கௌசி, க.கிஷாந்தன்