பாலஸ்தீனத்தின் பிரதமர் முகம்மது சத்தயே தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து போரை நடத்தி வரும் நிலையில், தற்போது இவர் ராஜினாமா செய்திருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் திகதியன்று தொடங்கிய இஸ்ரேல்-காசா போர் தற்போது வரை சுமார், 30,000 பேரின் உயிரை எடுத்திருக்கிறது.
போரை தடுக்க ஐநா பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதும், இஸ்ரேல் அதை மதிக்கவில்லை. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் போர் நிறுத்த தீர்மானம் கொண்டு வரப்பட்டபோதெல்லாம், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை ரத்து செய்ய வைத்திருந்தது.
இந்நிலையில், பாலஸ்தீனத்தின் பிரதமர் முகம்மது சத்தயே தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் கொடுத்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், “காசா பகுதிக்கு எதிரான ஆக்கிரமிப்பு, மேற்குக் கரை (வெஸ்ட் பேங்க்) மற்றும் ஜெருசலேமில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பு அதிகரிப்பை தொடர்ந்து ராஜினாமா செய்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
பாலஸ்தீனத்தின் அதிபர் அப்பாஸ் மாற்றப்பட்டு வேறு ஒருவர் அதிபராக்கப்பட வேண்டும் என்று சமீபத்தில் அமெரிக்கா வலியுறுத்தியிருந்தது. இதனையடுத்து பிரதமர் ராஜினாமா செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.