கடைகளில் தற்போது பால்மா பொதிகளை மறைத்து வைத்துக் கொடுப்பது போல அரசாங்கத்தின் 2000 ரூபாய் நிவாரணத் தொகையை ரகசியமாக வழங்க வேண்டிய நிலைமை கிராம சேவகர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டில் கடந்த 20 ஆம் திகதி இரவு 10 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.இதனால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு 2000 ரூபாய் அரச நிவாரணம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது.
இந்த அரச நிவாரணத் தொகையை பெற்றுக்கொள்ளும் பயனாளிகளின் தெரிவு ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் உள்ள கிராமிய குழுவின் ஊடாக மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் விபரங்கள் பிரதேச செயலரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பயனாளிகளின் தொகையில் பத்து வீதமானோருக்கே பிரதேச செயலகங்களினால் கிராமசேவகர்களுக்கு 2000ரூபாய் அரச நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
உதாரணமாக ஒரு கிராம சேவகர் பிரிவில் 1500 பயனாளிகளில் பெயர்கள்
வழங்கப்பட்ட போதும் 100 முதல் 150 பேருக்கு வழங்கக் கூடிய வகையிலேயே இந்த அரச நிவாரணமான 2000 ரூபாய் பிரதேச செயலகங்களில் வழங்கப்பட்டுள்ளதாக கிராமசேவகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் என்று தெரிவு செய்யப்பட்ட அனைத்து பயனாளிகளுக்கும் 2000 ரூபாய் அரச நிவாரணம் வழங்க முடியாத நிலைமை கிராம சேவகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்த அரச நிவாரணத்தை வெளிப்படையாக பயனாளிகளுக்கு வழங்குவதை கிராம சேவகர்கள் தவிர்த்து வருவதாகவும் ரகசியமான முறையில் இதனை வழங்கி வருவதாகவும் அறியமுடிகின்றது.
மேலும் இந்த அரச நிவாரணத்தை சிறிய தொகையான பயனாளிகளுக்கு வழங்குவதால் தமக்கு மக்கள் மத்தியிலிருந்து பாரிய எதிர்ப்புகள் ஏற்படலாம் என்பதைக் கருதி கிராம சேவகர்கள் பலர் பிரதேச செயலகங்களில் இருந்து தாம் பெற்றுக்கொண்ட நிவாரணத் தொகையை மீண்டும் பிரதேச செயலாளர்களுக்கு ஒப்படைப்பதற்கு தயாராகி வருவதாகவும் அறியமுடிகின்றது.
ஆகவே அரசாங்கத்தின் இந்த 2000 ரூபாய் நிவாரணமானது ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகும். இதனால் மக்களே பெரும்பாலும் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தினால் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ள அனைவருக்கும் அரச நிவாரணத்தை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்.










