தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் பூனம் பஜ்வா கலந்து கொள்வதாக தகவல்
பரத்தின் சேவல் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் பூனம் பஜ்வா. ஜீவாவின் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, ஜி.வி. பிரகாஷின் குப்பத்து ராஜா, அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
தன் கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் பூனம் பஜ்வா. இந்நிலையில் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் பூனம் பஜ்வா போட்டியாளராக கலந்து கொள்கிறார் என்று பேச்சு கிளம்பியது.
பூனம் பஜ்வா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நெருக்கமான ஒருவர் உறுதி செய்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருக்க பூனம் பஜ்வாவுக்கு ரூ. 45 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். முந்தைய சீசனை போன்றே இந்த சீசனையும் நாகர்ஜுனா தான் தொகுத்து வழங்கவிருக்கிறார். அவருக்கான சம்பள விபரம் இதுவரை வெளியாகவில்லை.
அடுத்த மாதத்தில் இருந்து தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை துவங்க அவர்கள் ஏற்பாடு செய்வதை பார்த்து தமிழ் ரசிகர்கள் லைட்டா கவலை அடைந்துள்ளனர்.
வீட்டில் சும்மா இருக்கும் நேரத்தில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பினாலாவது பொழுது போகும். ஆனால் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு நடப்பது போன்றே தெரியவில்லையே என்று தமிழ் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்
இதற்கிடையே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஒப்புக் கொள்கிறீர்களா இல்லையா என்று கேட்டு ஓவியா ட்வீட் செய்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் டிஆர்பிக்காக போட்டியாளர்கள் டார்ச்சர் செய்யப்படுவதாக ஓவியா கூறியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஓவியாவே இப்படி கூறியிருப்பது பலரையும் வியக்க வைத்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிஆர்பிக்காக போட்டியாளர்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். இது எல்லாம் நிஜம் இல்லை வெறும் ஸ்க்ரிப்ட். கொடுத்த காசுக்காக நாங்கள் ஒரு கேம் ஷோவில் சண்டை போடுவதை பார்த்துவிட்டு நிஜ வாழ்க்கையில் எங்களை விளாசுவது சரியில்லை என பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலர் முன்பு தெரிவித்தனர்.
பிக் பாஸ் ஒரு கேம் ஷோ. அதை வைத்து என்னை நிஜத்தில் மதிப்பிட வேண்டாம் என்று வனிதா விஜயகுமார் கூட தொடர்ந்து கூறி வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டபோது ஜூலி சொன்ன பொய்க்காக இன்னும் சமூக வலைதளங்களில் அவரை திட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் அவர் கலந்து கொள்கிறார், இவர் கலந்து கொள்கிறார் என்று தகவல் வெளியானதே தவிர இதுவரை ப்ரொமோ வீடியோ கூட வரவில்லை. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை செப்டம்பர் மாதம் துவங்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால் அந்த தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு நடக்குமா என்று தெரியாத நிலையில் தெலுங்கு, இந்தியில் நிகழ்ச்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.