பிராந்திய செழிப்பு மற்றும் மீள்தன்மைக்காக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளின் திறனைப் பயன்படுத்திக் கொள்வதற்காக, பிம்ஸ்டெக்குடன் நெருக்கமாகப் பணியாற்ற சிறிலங்கா உறுதிபூண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பிம்ஸ்டெக் அமைப்பின் பொதுச் செயலாளர் இந்திரா மணி பாண்டேவை நேற்று வெளிவிவகார அமைச்சில் சந்தித்துப் பேசிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிம்ஸ்டெக் கட்டமைப்பின் கீழ் நடைபெற்று வரும் முன்முயற்சிகளின் முன்னேற்றம் குறித்து இரு தரப்பினரும் ஆக்கபூர்வமான விவாதங்களை நடத்தியதாகவும், பிராந்திய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்ததாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விஞ்ஞான, தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளுக்கான முன்னணி நாடாக, சிறிலங்கா அதன் துணைத் துறைகளில், குறிப்பாக தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் மனிதவள மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது, இது முழு பிராந்தியத்தின் கூட்டு முன்னேற்றத்திற்கும் பங்களிக்கிறது என்று அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.