அரசாங்கத்தின் நிர்வாக முடிவுகள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், அரச சேவையினாலேயே அரச சேவை பின்னடையும் நிலை ஏற்படுமென பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
கேகாலை நகர சபையில் நடைபெற்ற ‘தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்ட கேகாலை மாவட்ட மீளாய்வுக் கூட்டத்தில்’ கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“நாம் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு மக்கள் பங்களிப்புடன் கூடிய வேலைத்திட்டம் தேவை. நாட்டை உணவில் தன்னிறைவடைந்ததாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றுவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது. பயிரிடுவதற்குள்ள தடைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எல்.ஆர்.சி. காணிகள் விவசாயத்திற்காக வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுள்ளது. காணிச் சீர்திருத்தச் சட்டத்தினால் விவசாயிகள் இழந்த பல பகுதிகள் உற்பத்தி நடவடிக்கைகளில் பங்கு பெறச்செய்வதற்கான வாயில்கள் திறக்கப்பட்டன. சட்டத்தின் நோக்கங்கள் அல்லது தற்போதைய உணவுப் பாதுகாப்பை அடையும் இலக்கை நோக்கிச் செல்ல வேண்டுமானால், நாம் மக்களுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும்.
நாம் பாரிய அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளோம். வெளிநாடுகளுக்கு செல்லும் அந்நியச் செலாவணியைக் குறைக்க வேண்டியது அவசியம். எந்தவொன்றையும் விதைத்து அறுவடைசெய்யக்கூடிய வளமான மண் நம்மிடம் இருப்பதால், உணவு உற்பத்தி என்ற இலக்கை அடையலாம். எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.










