” போரை முடிவுக்குகொண்டுவந்து நாட்டைமீட்ட மஹிந்த ராஜபக்சவுக்கு சமூக வலைத்தளங்களில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தால்கூட, ” ஆத்மா இளைப்பாறட்டும்” (RIP) என பலர் பதிவிடுகின்றனர். எனவே, இப்படியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தப்பட வேண்டும்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, இலத்திரனியல் ஊடகங்களுக்கான ஒலி/ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” தேசிய மட்டத்தில் உள்ள தொலைக்காட்சி, பத்திரிகைகள், வானொலிகளை கட்டுப்படுத்தும் எண்ணம் இல்லை. ஆனால் பொறுப்பற்ற விதத்தில் செயற்படும் சமூக ஊடகங்களை நெறிப்படுத்த வேண்டும். 30 வருடகாலம் இருந்த போரை முடிவுக்கு கொண்டுவந்த மஹிந்த ராஜபக்சவுக்கு பிறந்தநாள் தெரிவித்தால்கூட, ‘விரைவில் ஆத்மா இளைப்பாறட்டும்’ என்றெல்லாம் பதிவிடுகின்றேன். எனது பேஸ் புக் பக்கத்திலும் அப்படி நடந்துள்ளது.
ராஜபக்சக்கள் இல்லாவிட்டால், இஸ்ரேல் – காசாவில் நடப்பதுதான் இங்கு தற்போது நடந்துகொண்டிருக்கும். இதனை மறக்ககூடாது. போரை முடிவுக்கு கொண்டுவந்தது மட்டுமல்ல வடக்கு, கிழக்கில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. புலிகளால் அழிக்கப்பட்ட இடங்கள் கட்டியெழுப்பட்டன.” – என்றார்.