” பிள்ளையானை கைது செய்து, அவர் வழங்கிய வாக்குமூலம் என்ற அடிப்படையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரியொருவரை உருவாக்கும் அரசாங்கத்தின் முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது.”
இவ்வாறு பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும், பிள்ளையானின் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பு கூறவேண்டிய நபர்கள் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னதாக பகிரங்கப்படுத்தப்படுவார்கள் என மார்ச் 30 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில் ஜனாதிபதி குறிப்பிட்டார். இன்று ஏப்ரல் 21 ஆம் திகதி? ஆனால் அப்படியொரு வெளிப்படுத்தல் ஜனாதிபதியால் செய்யப்படவில்லை. அந்த அடிப்படையில் மற்றுமொரு உறுதிமொழியை அரசாங்கம் மீறியுள்ளது.
பிள்ளையானை கைது செய்து, அவர் வழங்கிய வாக்குமூலம் என்ற அடிப்படையில் தமது மனதில் உள்ள பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்தவே அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. அதனால்தான் பிள்ளையானை சந்திப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப்படவில்லை. சந்தேக நபர் ஒருவருக்குள்ள உரிமைகள்கூட மறுக்கப்பட்டன. பிள்ளையானின் கைது தொடர்பில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்புபடுத்தப்பட்டது.
இதனால்தான் சட்ட துருப்பை பயன்படுத்தி பிள்ளையானை, சந்தித்து அரசாங்கத்தின் திட்டத்தை முறியடித்தோம். பிரதான சூத்திரதாரியை உருவாக்கும் முயற்சியை இல்லாது செய்ய முடிந்தது.
சஹ்ரான்தான் பிரதான சூத்திரதாரியென அமெரிக்காவின் எப்பிஐகூட கூறியுள்ளது.” – என்றார்.