அரசியல் வாதிகளுக்கிடையிலான போட்டி காரணமாக புசல்லாவை, பெரட்டாசி வீதி ஊடான இபோச பஸ் சேவையை ஆரம்பிப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
எனவே, அரசியல் போட்டியை விடுத்து தமது பகுதிக்கான பஸ் சேவையை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புஸல்லாவையில் இருந்து பெரட்டாசிவரை போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட இபோச பஸ், வீதி கடுமையாக சேதமடைந்ததால் பல வருடங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. மக்களின் கடும் போராட்டத்துக்கு மத்தியில் குறித்த வீதி புனரமைக்கப்பட்டது.
இந்நிலையில் புசல்லாவையில் இருந்து அயரி பாடசாலைவரை இபோச பஸ் சேவையை வழங்குவதற்கு கம்பளை டிபோ முன்வந்தது. அத்துடன், கொத்மலை டிபோ ஊடாகவும் பஸ்ஸொன்று சேவையில் ஈடுபடுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
கம்பளை டிப்போவால் போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க ஏற்பாடுகள் இடம்பெற்றிருந்தாலும், இரு அரசியல் கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள போட்டியால் பஸ் சேவை தடைபட்டுள்ளது.
தமது கட்சிதான் பஸ் சேவையை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்க வேண்டும் என எழுந்துள்ள போட்டியே இதற்கு காரணம் என மக்கள் தரப்பில் இருந்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அரசியல் போட்டியை விடுத்து தமக்கான பஸ் சேவையை ஆரம்பிக்க வழி சமைத்து கொடுக்குமாறு அரசியல் பிரமுகர்களிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.










