உள்ளூர் சமூக விதிமுறைகளை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடியை கலப்பையில் பூட்டி வயலை உழ வைத்த கொடூரம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
மாடுகளைப்போல இந்த காதல் ஜோடியை கலப்பையில் பூட்டிய ஊரவர்கள் சாட்டையால் அடித்து வயலை உழவச் செய்துள்ளனர். இந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விண்வெளியில் விவசாயம் செய்ய முடியுமா என்று ஆய்வு நடத்தும் இந்த அறிவியல் காலத்திலும் இப்படியும் ஒரு கொடுமையா எனக் கேட்கும் அளவுக்கு இச்சம்பவம் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாய வழக்கத்துக்கு உட்பட்ட பழங்குடியினர் வசிக்கும் கிராமத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தந்தை வழி அத்தை மகனை திருமணம் செய்யக்கூடாது என்ற கட்டுப்பாட்டை இந்த பஞ்சாயத்தார் விதித்துள்ளனர். இதை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கி, அவர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கும் பழக்கம் அங்கு உள்ளது.
இந்தநிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது அத்தை மகனை காதலித்து வந்துள்ளார். இருவரும் ஊர் கட்டுப்பாட்டை மீறி திருமணம் செய்ததாலேயே இக்காதல் ஜோடி மிகக் கொடூரமாகத் தண்டிக்கப்பட்டுள்ளது.இது குறித்த விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.