“தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போர் ஆற்றல் அழிக்கப்பட்டிருந்தாலும் அவ்வமைப்பின் கருத்தியல் மற்றும் அரசியல் என்பன தொடர்ந்தும் செயற்படுகின்றது.” –
இவ்வாறு இறுதிக்கப்பட்டப்போரின்போது 57 ஆவது படையணியின் கட்டளைத்தளபதியாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பயங்கரவாதிகளின் ‘பிரிவினைவாத” நோக்கத்தை தோற்கடிப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்தே செயற்பட்டோம்.
இறுதிப்போரின்போது அவ்வமைப்பின் பிடிக்குள் இருந்த 3 லட்சம் வரையான சிவில் மக்களை மீட்டோம். எமது உணவு, மருந்தைக்கூட அவர்களுக்கு வழங்கினோம். இதனை நாம் மகிழ்ச்சியுடனேயே செய்தோம்.
நிலைமை அப்படி இருக்கையில், இலங்கையில் இனப்படு கொலை நடந்தது என்பதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் கனடாவில் வாழும் சிங்களவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என அந்நாட்டின் அரசியல்வாதியொருவர் கூறியுள்ளார். அவரின் கருத்து நகைச்சுவைத்தனமானது.
பிரிவினைவாத அமைப்பின் போர் ஆற்றலை நாம் தோற்கடித்திருந்தாலும் பிரிவினைவாத வேலைத்திட்டத்தின் கருத்தியல், அரசியல் என்பன வேறு கோணத்தில் அடிப்படைவாத டயஸ்போராக்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. அனைத்து தமிழ் டயஸ்போராக்களும் அல்ல. அவர்களுக்குள் உள்ள அடிப்படைவாத டயஸ்போராக்களே இச்செயலில் ஈடுபடுகின்றனர்.
தேசிய அமைப்புகள், சமூகவலைத்தளங்கள், தேசிய ஊடகங்கள், நிபுணர்கள், புத்திஜீவகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு பணம் வழங்கி மேற்படி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.” – என்றார்.
