ஜே.வி.பியினர் புலிகளுக்கு ஆயுதம் வழங்கினர் என இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் கூறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
மொட்டு கட்சியின் களனி தொகுதி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நாங்கள் இன்னும் போர் பற்றி கதைக்கின்றோம் என சிலர் கூறுகின்றனர். அவ்வாறு சொல்பவர்கள் போர் பற்றி தற்போது புத்தகமும் எழுதுகின்றனர்.
ரணசிங்க பிரேமதாச புலிகளுக்கு ஆயுதம் வழங்கினார் என்பதை அறிவோம். ஆனால் மற்றுமொரு கட்சியும் (ஜே.வி.பி) வழங்கியது என பிள்ளையான் கூறியுள்ளார். அது பற்றியும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
புலிகளுக்கு ஆயுதம் வழங்குவதற்கு அந்த அரசியல் கட்சியிடம் துப்பாக்கிகள் இருந்தனவா? அவ்வாறு வழங்கி இருந்தால் அந்த கட்சியின் கொள்கை பற்றி நாட்டு மக்கள் அறிய வேண்டும்.
நாம் ஒரு வேலைத்திட்டத்துடன் பயணிக்கின்றோம். எனவே, மொட்டு கட்சியுடன் இணைந்து பயணியுங்கள். சிறந்த எதிர்காலத்தை நாம் கட்டியெழுப்புவோம்.” – என்றார்.
