” தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு முடிவுகட்டிய படையினருக்கு எதிராக சர்வதேச விசாரணையை நடத்தும் நிகழ்ச்சி நிரலே சனல் – 4 காணொளி ஊடாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அதனால்தான் சம்பந்தனும் சர்வதேச விசாரணை கோருகின்றார். இதற்கு அரசு இடமளிக்ககூடாது.”
இவ்வாறு விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி வலியுறுத்தியுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர கூறியவை வருமாறு,
” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்மீதான பொறுப்பை எமது நாட்டு புலனாய்வு பிரிவு மற்றும் படையினர்மீது சுமத்து வதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது. புலனாய்வு பிரிவு மற்றும் படையினர் வேட்டையாடப்படுவதை தடுப்பதற்கு நாட்டு மக்கள் தலையிட வேண்டும்.
புலிகள் அமைப்பை தோற்கடிப்பதற்கு தமது உயிரை தியாகம் செய்த புலனாய்வு பிரிவு மற்றும் படையினரை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தி, அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு தமிழ் டயஸ்போராக்கள் முயற்சிக்கின்றன.
சனல் – 4வில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள புலனாய்வு பிரிவு பிரதானி உள்ளிட்டவர்களுக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின்போது, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பிரதி ஆணையாளரும் சர்வதேச விசாரணைகோரும் யோசனையை முன்வைத்துள்ளனர். இதன்மூலம் நோக்கம் தெளிவாகின்றது.
அதாவது பிரிட்டனில் உள்ள சனல் – 4 விற்கு தமிழ் டயஸ்போராக்கள் பணம் கொடுத்து நிகழ்ச்சியை ஒளிபரப்புகின்றனர், அந்த காணொளியில் உள்ள விடயங்களை அடிப்படையாகக்கொண்டு சம்பந்தன் சர்வதேச விசாரணை கோருகின்றார்.
சனல் – 4 காணொளி ஊடாக சர்வதேச சக்திகள் மேலும் ஒரு நோக்கங்களை அடைய பார்க்கின்றன. ஒன்று இலங்கையில் செயற்படும் இஸ்லாம் அடிப்படைவாதத்தை மறைப்பது, அடுத்தது தாக்குதலை தடுக்க தவறிய ஆட்சியாளர்களை பாதுகாப்பது.
சனல் – 4 என்பது பணத்துக்காக காணொளிகளை வெளியிடும் ஊடகம், படையினருக்கு எதிராக இதற்கு முன்னரும் வெளியிட்டுள்ளது. எனவே, படையினருக்கு எதிராக சர்வதேச விசாரணையை நடத்த வழிவகுப்பதே இதன் நோக்கம். இது தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.” – என்றார்.










