” ஒருபோதும் ஒழிக்கவே முடியாது எனக்கூறப்பட்ட புலிகள் அமைப்புக்கு முடிவுகட்டி போரில் வெற்றிபெற்றதுபோல் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் சமரிலும் கோட்டா – மஹிந்த தலைமையின்கீழ் நிச்சயம் வெற்றிபெறுவோம்.” – என்று அமைச்சர் உதய கம்மன்பில சூளுரைத்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம்வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சூளுரைத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” எதிர்க்கட்சிகள் இன்று வரவு – செலவுத்திட்டத்தை விமர்சிக்கின்றன. அரசாங்கம் செய்வது தவறெனவும் குற்றஞ்சாட்டுகின்றன. நாம் செய்வது தவறெனில், பட்ஜட்டில் உரிய திட்டங்கள் இல்லையெனில், மாற்று யோசனைகளை முன்வைக்குமாறு எதிரணிக்கு சவால் விடுக்கின்றேன். டிசம்பர் 10 ஆம் திகதிவரை அதற்கு அவகாசம் இருக்கிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்காக ஆற்றிய தேசிய உரையில் கூறியதுபோல ,நாம் நம்புவது எதிரணியையோ, வெளிநாட்டு சக்திகளையோ அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களின் ஆலோசனைகளையோ அல்ல. நாட்டு மக்களையும், உள்நாட்டு பொறிமுறையையும், உள்நாட்டு வளங்கள்மீதுமே நம்பிக்கை வைத்துள்ளோம்.
குறிப்பாக புலிகள் அமைப்பை ஒழித்து போரை முடிவுக்கு கொண்டுவரமுடியாது எனக் கூறப்பட்டது. ஆனால் மஹிந்த, கோட்டா ஒருங்கிணைப்பின்கீழ் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தோம். தற்போது கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு தொடர்பில் உலகுக்கு முன்னுதாரணமாக செயற்படுகின்றோம். எனவே, புலிகளை ஒழித்து போரை வெற்றிகொண்டதுபோல, பொருளாதார சமரையும் நிச்சயம் வெற்றிகொள்வோம்.” – என்றார்.