பெருந்தோட்ட மக்களுக்கு முகவரியை வழங்குவதற்கான வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என அரச பெருந்தோட்ட தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு அமைச்சர் (அமைச்சரவை அல்லாத அமைச்சு) ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட மக்களை சாதாரண அடிப்படை உரிமைகள் கொண்ட மக்களாக மாற்றும் ஜனாதிபதியின் கொள்கை திட்டத்துக்கு அமைய இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விடயத்தை விரைவுப்படுத்துமாறு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளரினால், அரச பெருந்தோட்டயாக்கம், மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்கள் என்பவற்றுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் அனைத்து மக்களுக்கும் முகவரியை பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டினை தொடருமாறு உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் (04) அறிவித்துள்ளது.
முவன்கந்த தோட்டத்தில் வசித்து வருகின்ற சுரேஷ் ஜீவரத்னம் என்ற இளைஞர் தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணைகளை முடிவிற்கு கொண்டுவந்த போதே உயர்நீதிமன்றம் அரசாங்கத்திற்கு இதனை அறிவித்துள்ளது.