‘பெருந்தோட்டங்களில் பட்டினி சாவை தடுங்கள்’ – உலக நாடுகளிடம் மனோ கோரிக்கை

இந்தியா, ஐ.நா. உட்பட உலகத்துடன் சேர்ந்து, பெருந்தோட்டங்களில் பட்டினிச் சாவு நடக்க முன் நடவடிக்கை எடுங்கள் என்று நாடாளுமன்றத்தில் இன்று அரசிடம் வலியுறுத்தினார் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி.

சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையையைச் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:-

“ பெருந்தோட்டத் துறையில் நிலவும் பாரதூரமான நிலைமைகளை பின்வரும் உலக நிறுவன அறிக்கைகள் காட்டுகின்றன.

(1) ஐ.நா. சபையின் உணவு விவசாய நிறுவனம்/உலக உணவு நிறுவனத்தின் இலங்கை உணவு நெருக்கடி கணிப்பீடு பற்றிய விசேட கூட்டறிக்கை

(2) ஐ.நா. சபையின் உலக உணவு நிறுவனத்தின் கண்காணிப்பு அறிக்கை

(3) இலங்கை செஞ்சிலுவை மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கங்களின் பொருளாதார ஆய்வறிக்கை

(4) நவீன அடிமைத்துவம் பற்றிய ஐ.நா. விசேட அறிக்கையாளர் டொமாயா ஒபகடாவின் ஐ.நா. மனித உரிமை ஆணையக அறிக்கை

நாட்டின் உணவு நெருக்கடி பற்றிய குடும்ப மட்ட ஆய்வுகளில், பெருந்தோட்டத் துறையில் அதிகபட்ச 51 விகிதம் பதிவாகி உள்ளது. நாட்டின் நகர துறையில் 43 விகிதமும், கிராமிய துறையில் 34 விகிதமும் பதிவாகியுள்ளன.

இலங்கையில் இன்று ஒப்பீட்டளவில் மிகவும் நலிவுற்ற பிரிவினர் 51 விகிதமான பெருந்தோட்ட மக்கள் என்பதைக் கவனியுங்கள். இது எமக்குத் தெரியும். கைப்புண்ணை காண கண்ணாடி தேவையில்லை. ஆனால், இதைத்தான் இன்று உலக சமுதாயமே கூறுவதைக் கவனியுங்கள். அங்கே துர்ப்பாக்கிய பட்டினி சாவு நடக்க முன் இதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகின்றோம் என்பதையும் கவனியுங்கள்.

ஐ.நா. விசேட அறிக்கையாளர் டோமொயா ஒபொகடா பெருந்தோட்ட மக்கள் ஒடுக்கப்படுவதில், பெருந்தோட்ட மக்கள் சிறுபான்மை தமிழர்கள் என்ற காரணமும் இருக்கின்றது என்று கூறியுள்ளார். இது பாரதூரமான, ஆனால், உண்மை குற்றச்சாட்டு. இங்கே இனவாதம் நிலவுகின்றது. அதை அவர் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவுக்கு கூறியுள்ளார்.

நான் ஏற்கனவே இதுபற்றிய கலந்துரையாடலை ஆரம்பிக்கும்படி கொழும்பில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆலோசகர் ஜுஹான் பெர்னாண்டசுக்கு எழுதிக் கூறியுள்ளேன்.

விசேட ஐ.நா. அறிக்கையாளர் டோமொயா இது பற்றிய எனது ருவிட்டர் செய்திக்குப் பதிலளித்துள்ளார்.

அடுத்த வருடம் மலையகத் தமிழர் பிரச்சினையையும் ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தில் எதிர்கொள்ளத் தயாராகுங்கள்.

நடப்பு அரசின் சமூக பாதுகாப்பு முறைமைகள், பெருந்தோட்டத் துறையை தேவையான அளவில் பாதுகாக்காமல், இந்தப் பிரிவை முழுமையாகத் தோட்டத் தனியார் நிறுவனங்களின் கைகளில் விட்டுள்ளன. இந்த நடைமுறை இதற்கு முன்னும் சாத்தியப்படவில்லை. இனிமேலும் சாத்தியப்படாது.

இந்தப் பெருந்தோட்டக் கம்பனி முதலாளிகள் நிலத்துக்குச் சொந்தக்காரர்கள் இல்லை. இது அரசு நிலம். மக்கள் நிலம். இந்த நிலத்தின் மீது நமது தொழிலாளர் நிகழ்த்துகின்ற உழைப்பிலிருந்து பெறுகின்ற இலாபத்தை இவர்கள், உழைக்கும் மக்களுடன் பகிர்ந்துகொள்ளத் தயார் இல்லை. இதை இவர்கள் இனித் தொடர்ந்து செய்ய இடம் கொடோம்.

வெகுவிரைவில் நாம் அனைத்து தோட்டத் தொழிற்சங்களையும் இணைத்து கூட்டு வேலைத்திட்டத்தில் இறங்கவுள்ளோம்.

‘சப்ளை செயின்” என்றால், ஒரு பொருள் உற்பத்தி செய்யப்படும் முதல் புள்ளியில் இருந்து அது விற்பனை கடைசி புள்ளி வரை என்பதாகும். முதல் புள்ளியில் மனித உரிமைகள் கேவலமாக மீறப்படுகிறது என இன்று உலகமே உணரத் தொடங்குகின்றது. ஆகவே கடைசி புள்ளியில், லண்டன், பாரிஸ், நிவ்யோர்க் நகரங்களில், ‘சிலோன் டீ’யை விலைக்கு வாங்கி குடிப்பதை நிறுத்த எம்மால் முடியும். தேயிலை ஏற்றுமதியை நிறுத்த எம்மால் முடியும். நாட்டை நேசிபவர்கள் என்பதால் அதை நாம் செய்ய விரும்பவில்லை. அந்த நிலைக்கு எம்மை தள்ள விட வேண்டாம்.

ரணில் விக்கிரமசிங்க அன்று பிரதமர் பதவியில் இருக்கும் போது, எனக்கு இந்தச் சபையில் ஒரு உறுதி மொழி வழங்கினார். தோட்டங்களில் இருக்கும் பயன்படுத்தப் படாத நிலங்களை அங்கு வாழும் மக்களுக்கு வீட்டுத் தோட்டங்களை செய்ய வழங்குவதாகக் கூறினார். அந்தத் திட்டத்துக்கு, ‘மனோ கணேசன் திட்டம்’ என எனது பெயரை வைப்பதாகவும் கூறினார். ஒன்றும் நடக்கவில்லை. எனது பெயர் வேண்டாம். துன்பப்படும் மக்களுக்கு காணி வழங்க அனைத்து தரப்புகளையும் அழைத்து கூட்டம் நடத்துங்கள். அது போதும்.

சமுர்த்தி திணைக்களம், 17/10/2022 திகதிய, DSD/HO/14/SS/05/01/04/2022 இலக்க சுற்றறிக்கை மூலம் செப்டெம்பர், ஒக்டோபர், நவம்பர் காலகட்டத்துக்கான உதவி பெறுநர் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் அமுலாகும் இந்தத் திட்டம் பற்றிய சிங்கள மொழி சுற்றறிக்கை விபரங்கள், இலங்கையின் மிகவும் நலிவுற்ற பிரிவினரான பெருந்தோட்ட மக்களைச் சென்றடையவில்லை.

இந்தச் சமுர்த்தி திணைக்களம், பெருந்தோட்ட மக்களை பொருட்படுத்துவதே இல்லை. பிழையான கணக்குகளை வைத்துகொண்டு, இலங்கையில் மிகவும் நலிவுற்ற பிரிவினர் என உலகமே சொல்லும் பெருந்தோட்ட மக்களுக்கு சமுர்த்தி உதவிகள் வழங்குவதில்லை. வாழ்வாதார உதவிகள் வழங்குவதில்லை. சமுர்த்திப் பட்டியலில் பெருந்தோட்ட மக்கள் இல்லையென்று, சமுர்த்தி திட்டத்துக்கு நிதி உதவி செய்யும், ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு நான் சொல்லப் போகின்றேன்.

இலங்கை நாடாளுமன்றம், இலங்கையின் மிகவும் நலிவுற்ற பிரிவினரான இந்தப் பெருந்தோட்ட மக்களின் மீது விசேட அவதானத்தைச் செலுத்த வேண்டும் என நான் பிரேரிக்கின்றேன். ” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles