நுவரெலியா மாவட்டம் உட்பட மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் பிசிஆர் பரிசோதனைகள் அதிகரிக்கப்படவேண்டும் என்பதுடன் கொரோனா சிகிச்சை நிலையங்களும் அமைக்கப்படவேண்டும் என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” முழு உலகத்தையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா என்ற கொடிய வைரஸுக்கு மத்தியில் நாம் இன்று எமது அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
கொரோனா வைரஸ் தொடங்கி அதனுடைய தாக்கம் சீனாவில் ஆரம்பிக்கப்பட்ட போதே தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாஸ அவர்கள் இந்த பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.இந்த வைரஸில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
ஆனால் இந்த அரசாங்கம் அந்த கோரிக்கையை சிறிதளவேனும் கண்டுகொள்ளவில்லை.அதன் விளைவை நாம் இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
அப்போதே விமான நிலையத்தை மூடி நாட்டில் வைரஸ் தடுப்பு திட்டங்களை செயல்படுத்தி இருந்தால் நிரந்தரமாக கொரோனா அற்ற நாடாக நமது நாடு மாறி இருந்திருக்கும்.ஆனால் தான்தோன்றித்தனமாக செயல்படும் இந்த அரசாங்கத்தின் சில அசமந்த போக்கான நடவடிக்கைகள் காரணமாக இன்று நாட்டில் உள்ள 25 மாவட்டங்களிலும் வைரஸ் பரவியுள்ளது.
தேர்தலுக்கு முன்னர் கொரோனா தொற்றின் முதலாம் அலை நாட்டில் காணப்பட்ட போது யுத்தத்தை வெற்றி கொண்டது போல கொரோனாவையும் வெற்றி கொண்டுவிட்டதாக அரசாங்கத்தில் உள்ளவர்கள் மார்தட்டிக் கொண்டனர்.
தேர்தல் முடிந்து தற்போது ஆட்சியும் அமைத்து விட்டனர். திடீரென நாட்டில் மீண்டும் குரோனா பரவ ஆரம்பித்துள்ளது. ஆனால் யுத்தத்தை போன்று கொரோனாவை அழிக்க முடியாது என நாட்டின் தலைவர் அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்றின் இரண்டாம் நிலை ஆரம்பித்து தற்போது 30க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகி உள்ளன. பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இன்று நாளொன்றுக்கு 3 தொடக்கம் 4 பேர் கொரோனா வைரஸினால் பலியாகின்றனர்.
கொழும்பு, கம்பஹா போன்ற மாவட்டங்களில் கொரோனா கொத்தணி எவ்வாறு அதிகளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றதோ அதே அளவு பாதிப்பை எதிர்கள்ளக்கூடிய மாவட்டமாக நுவரெலியா கண்டி பதுளை போன்ற பெருந்தோட்ட மலையக மக்கள் வாழும் பகுதிகள் காணப்படுகின்றன.
அங்கு லயன் குடியிருப்புகளில் மக்கள் மிகவும் நெருக்கமாக வாழ்கின்றனர். அவ்வாறான பகுதிகளில் கொரோனா தோற்று ஏற்படுமாயின் அது மிகப்பெரிய கொத்தணி ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.
அதை நுவரெலியா மாவட்டம் உள்ளிட்ட பெருந்தோட்ட மலையக மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் பிசிஆர் பரிசோதனை அதிகளவாக மேற்கொள்ளப்பட வேண்டும்.குறித்த பிரதேசங்களிலேயே அடையாளம் காணப்பட்ட இடங்களில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
கொரோனா வைரஸ் சிகிச்சை அளிக்கக்கூடிய வசதிகளுடன் வைத்தியசாலை ஏற்படுத்தப்பட வேண்டும்.எனவே யுத்தம் என்பது வேறு வைரஸ் என்பது வேறு என்பதை தெரிந்துகொண்டு இந்த அரசாங்கம் வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
56 அல்லது மல்டி பேரல் கொண்டு கொரோனாவை அழிக்க முடியாது என்பதை அரசாங்கத்திற்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். கங்கையில் மண்பானை போடுவதாலோ அல்லது வீர வசனங்களை பேசுவதாலோ கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது என்று இந்த அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.
வெறுமனே வாய் வார்த்தைகளால் மாத்திரமே இந்த அரசாங்கம் இன்று ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. அரசாங்கம் விடுக்கும் உத்தரவுகள் சரியாக நடைமுறையில் இல்லை.நிர்வாகத்தில் இருக்கின்ற சிக்கலை சரிசெய்யாமல் நாட்டு மக்கள் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்.
நாட்டு மக்கள் தேவையான அளவு ஒத்துழைப்பை அரசாங்கத்திற்கு வழங்கி வருகின்றனர். ஆனால் மக்கள் வழங்கும் ஒத்துழைப்பிற்கு அரசாங்கம் சரியான நிவாரணம் வழங்க தவறி உள்ளது.
விலைவாசி அதிகரித்துள்ளது. பஸ் கட்டணம் அதிகரித்துள்ளது. தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளது. பலர் கடன் சுமையில் உள்ளனர். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கி அவர்களை பாதுகாப்பாக வாழ வைக்க வேண்டியது அரசாங்கத்தின் பாரிய பொறுப்பாகும்.
இந்த பொறுப்பிலிருந்து அரசாங்கம் தப்பிக்க முடியாது.
எனவே இனிமேலாவது எதிர்க்கட்சிகள் மற்றும் சுகாதார தரப்பினர் முன்வைக்கும் பரிந்துரைகளை கவனத்தில் எடுத்து தனிப்பட்ட திட்டங்களை அல்லது தேவைகளைச் நிறைவேற்றிகா கொள்ளும் நோக்கில் செயல்படாது நாட்டு மக்களின் உயிர்களைப் பாதுகாக்க அரசாங்கம் பயனுள்ள திட்டங்களை தீட்டி செயல்படுத்த வேண்டும் என இந்த சபையிலே கேட்டுக்கொள்கிறேன்.