பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் நான்தான். இது கட்சி எடுத்த ஒருமித்த முடிவு. இதில் எவ்வித மாற்றமும் வராது – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேற்று அறிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் ஊடாக ஆளும் அதிகாரத்தை மக்கள் தமக்கு வழங்குவார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று இரண்டாவது நாளாகவும் கட்சி செயற்பாட்டாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையை ஏற்கின்றேன். பொதுத்தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகிவருகின்றோம். ஐக்கிய மக்கள் கூட்டணியாகவே பயணம் தொடரும். முற்போக்கு சக்திகள் எம்முடன் கைகோர்க்கலாம்.
தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என ரணில் விக்கிரமசிங்க அறிவித்துவிட்டார். பிறகு எப்படி அவருடன் இணைவது?
பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக என்னை களமிறங்குமாறு கட்சி அமைப்பாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏகமனதாக கோரிக்கை விடுத்தனர்.ஜனநாயக ரீதியில் எடுக்கப்பட்ட முடிவு இது.
பொதுத்தேர்தலில் மக்கள் எமக்கு ஆளும் அதிகாரத்தை வழங்குவார்கள் என நம்புகின்றோம்.” – என்றார்.
