“வவுனியாவில் அண்மைக்காலமாகப் போதை ஊசிப் பயன்பாடு பாடசாலை செல்லும் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதைக் கட்டுப்படுத்தப் பொலிஸார், பெற்றோர்கள் மற்றும் அரச – தனியார் நிறுவனங்கள் முன்வரவேண்டும்.”
– இவ்வாறு தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவரும் சமூக ஆர்வலருமான எஸ். சந்திரகுமார் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மாணவர்கள் தவறான வழிகளில் சென்றால் அவர்களின் எதிர்காலம் சிதைவடைந்துவிடும். எனவே, பெற்றோர்கள் தமது பிள்ளைகள் மீது அதிக கவனமுடன் செயற்பட வேண்டும்.
இன்றைய நிலைமையில் 16 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை செல்லும் மாணவர்கள் பல்வேறு போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி வருகின்றனர் . அத்துடன் வவுனியாவில் அண்மைய சில காலமாக போதை ஊசிப் பயன்பாடு அதிகரித்துச் செல்கின்றது.
இவ்வாறான சிலர் அடையாளம் காணப்பட்டு பொலிஸாரின் உதவியுடன் வெலிக்கந்தை புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். 16 வயதுக்குட்பட்ட பாடசாலை செல்லும் மாணவர்களே அதிகளவில் காணப்படுகின்றனர் .
எனவே, பெற்றோர்கள் தமது பிள்ளைகளில் அதிக கவனம் செலுத்தி அவர்கள் எங்கு செல்கின்றார்கள், யாருடன் பழக்கம் வைத்திருக்கின்றார்கள், எவ்வாறான நிலைமைகளில் வீடு வருகின்றார்கள் என்ற தகவல்களைத் துல்லியமாக அறிந்து வைத்திருக்க வேண்டும் .
மாணவர்களுக்கு எவ்வழிகளில் போதை ஊசி வழங்கப்படுகின்றன, இவை யாரால் எங்கிருந்து விநியோகம் செய்யப்படுகின்றன போன்ற கேள்விகளுக்கான பதில்கள் பொலிஸாரால் கண்டறியப்பட வேண்டும்” – என்றார்.
