போதைப்பொருட்களுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ளத் தயார்

போதைப் பொருள்களுக்கு எதிரான பரந்த பொதுமக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலம், நிச்சயமாக போதைப் பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து, எதிர்கால சந்ததியினரையும் சமூகத்தையும் அதிலிருந்து மீட்டெடுப்போம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

இன்று (30) முற்பகல் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் உயிரைப் பறித்து, நாட்டின் பொருளாதாரத்தையும் சமூகத்தையும் அழிக்கும் ஒரு தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் வர்த்தகத்திற்கு இனிமேலும் இடமளிக்க தமது அரசாங்கம் தயாராக இல்லை என்று வலியுறுத்திய ஜனாதிபதி, கைது செய்தல், புனர்வாழ்வு, தடுப்பு, பொதுமக்கள் அழுத்தம், மதம், விளையாட்டு மற்றும் கலாசாரம் ஆகிய அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து, “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு பன்முகத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

போதைப்பொருள் அச்சுறுத்தல் இயற்கையாக உருவாகவில்லை என்றும், அது நீண்ட காலமாக அரசியல்வாதிகள் மற்றும் சில அரச அதிகாரிகளின் ஆசிர்வாதத்துடன் உருவாக்கப்பட்டது என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசியல் நிழலின் கீழ் போலியான ஒரு அதிகாரத்தை உருவாக்கிக்கொள்வதற்கு குற்றவாளிகளுக்கு இருந்த வாய்ப்பை தற்போதைய அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதால், அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்து அந்த வலையமைப்பில் இருந்து அகன்று செல்லுமாறு அதனை ஆதரிக்கும் அரச அதிகாரிகளுக்கு கூறுவதாகவும் தெரிவித்தார். இந்த வர்த்தகத்தில் ஈடுபட்ட எவருக்கும் இனி ஒளிந்து கொள்ள வாய்ப்பு இருக்காது என்று ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.

மேலும், கிராமங்களுக்கும் மதத் தலங்களுக்கும் இடையிலான கலாசார தொடர்பைப் பயன்படுத்தி இந்த அச்சுறுத்தலை ஒழிப்பதில் முன்னணியில் இருக்குமாறு மதத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்த ஜனாதிபதி, இந்தப் பணியை வெற்றிகரமாக்கும் வகையில், போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான செய்திகளை அறிக்கையிடும் போது ஒழுக்கத்தையும் நாகரிகத்தையும் பேணுமாறு அனைத்து ஊடக நிறுவனங்களையும் கேட்டுக்கொண்டார்.

போதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வுக்காக எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து அதிக நிதி ஒதுக்கப்படும் என்றும், இதற்காக அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து தேசிய செயல்பாட்டு மையத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த நாட்டில் போதைப்பொருள் பரவல் ஒரு தேசிய பேரழிவாக மாறியுள்ளதுடன், பல குற்றங்கள் போதைப்பொருள் வர்த்தகத்தை மையமாகக் கொண்டு நடப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

திறமையாக முடிவெடுக்கும் பொறிமுறை மற்றும் பரந்த பொதுமக்கள் பங்கேற்புடன் கூடிய தேசிய அளவிலான வேலைத்திட்டத்தின் மூலம் இந்த அச்சுறுத்தலை ஒழிக்க வேண்டும் என்பதை அரசாங்கம் தற்போது இனங்கண்டுள்ளதுடன், இந்த தேசிய இலக்கை அடைய ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய பணியை செயல்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், பரந்த விளம்பரச் செயல்முறை மூலம் இந்த அச்சுறுத்தல் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய வலையமைப்பை துண்டித்தல், புனர்வாழ்வு வாய்ப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் போதைப்பொருள் பாவனையை கைவிட விரும்புவோருக்கு வாய்ப்புகளை வழங்குதல் ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவிக்கையில்,

” எமது நாட்டை ஆக்கிரமித்துள்ள பேரழிவை தோற்கடிப்பதற்காக இன்று அனைவரும் ஒன்று திரண்டிருக்கிறோம். இந்த பேரழிவு எந்தளவு ஆழமானது மற்றும் நாகசரமானது என நாம் அறிவோம். எமது பிள்ளைகள் எமது சமூகம் என்பன இந்த மாயப் பேரழிவிற்கு இறையாகி வருகிறது. இது தற்பொழுது உருவானதொன்றல்ல. பல தசாப்தங்களாக வளர்ந்து இந்த பேரழிவு முழு சமூகத்திற்குள்ளும் புறையோடிச் சென்று பீதியை உண்டாக்கும் நிலைக்கு மாறியுள்ளது.

இந்தப் பயணத்தில் எமக்கு தெரிவு செய்யக் கூடிய இரு பாதைகள் தான் உள்ளன. முதலாவது முன்னரைப் போன்றே இதற்கு இடமளித்து கண்டு கொள்ளாமல் இருப்பது. இதற்கு எதிராக போராடுவது இரண்டாவது பாதையாகும். நானும் எனது அரசாங்கமும் இந்த பேரழிவை எதிர்த்து போராடுவதற்கு முடிவு செய்துள்ளோம்.

இந்தப் பேரழிவு எமது பிள்ளைகளை ஆட்கொண்டு வருகிறது. சிறை செல்லும் 64 வீதமானவர்கள் போதைப்பொருள் சார்ந்த தவறுகளுக்காக பிடிபடுபவர்களாகும். 18-26 வயதுக்கிடைப்பட்ட இளைஞர்கள் இதற்கு கூடுதலாக இறையாகின்றனர். அவர்களின் எதிர்காலம், எதிர்பார்பார்ப்புகள் வீதிகளில் அழிந்து போகின்றன. இதனை எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஒவ்வொரு பிள்ளைகள் பிறக்கும் போது பெற்றோர் பெரும் எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பர். ஆனால் தமது கண்முன்னே தமது பிள்ளைகள் நாசமடைவதை கண்டு அவர்கள் வேதனை அடைகின்றனர். பெற்றோர் சமூகத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டுகின்றனர். இந்த பேரழிவிற்கு முழு குடும்பமும் இறையாகின்றது. முழு குடும்ப அலகும் வீழ்ச்சியடையும் அச்சுறுலுக்கு முகங்கொடுத்துள்ளது.

கிராமம் கிராமமாக இந்த மாயச் சூறாவளி பரவி வருகிறது. உடைகளை காயவைக்கவோ நெல்லை காயப் போடவோ முடியாது. மகளை தனியாக வீட்டில் நிறுத்தி விட்டுச்செல்ல முடியாது என கிராமங்களில் வாழும் தாய்மார்கள் கூறுகின்றனர்.கிராமங்கள் பீதியில் உள்ளன. குற்றச்செயல்கள் கிராமங்களில் உருவாகின்றன. இந்த பேரழிவு முழு சமூகத்தையும் ஆட்கொண்டுள்ளது.

வீதி விபத்துக்களில் அநேகமானவை போதைப் பொருட்களுடன் தொடர்புபட்டவையாக உள்ளன. எமது நாட்டில் சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான வன்முறைகளில் அதிகமானவை போதைப்பொருட்கள் சார்ந்தவை. பொது இடங்களில் விபரீதமான பாலியல் ஆசைகள் வெளிப்படுத்தப்படுகின்றன.

இந்த பேரழிவு நாட்டில் பாரிய வீழ்ச்சியை உருவாக்குகிறது. கட்டுநாயக்கு- கொழும்பு நெடுஞ்சாலையின் பாதுகாப்பிற்கு அதிரடிப்படையை ஈடுபடுத்த நேரிட்டுள்ளது. கேபிள்கள் வெட்டி எடுத்துச் செல்லப்படுகின்றன. யானை வேலிக்கு இடப்பட்டுள்ள பெட்டரி திருடப்படுகிறது . பாலங்களில் உள்ள இரும்பை வெட்டி எடுத்துச் செல்கின்றனர். இதனால் நாட்டில் ஸ்தீரமற்ற நிலை உருவாகின்றது.

பொது சமூகத்தினதும் பிரஜைகளினதும் பாதுகாப்பிற்காக இந்த பேரழிவைத் தோற்கடிக்க வேண்டும். நாம் எடுக்கும் முன்னெடுப்பை நிச்சயமாக வெற்றி பெறச் செய்வோம். இதனுடன் தொடர்புபட்டதாக பாரிய நிதி வலையமைப்பு காணப்படுகிறது.

ஒரு கிலோ 2 கோடி ரூபாவை விட அதிக விலைக்கு விற்பனை செய்யும் போதைப் பொருள் உள்ளது. எமக்கு 800-900 கிலோ பிடிபடுகிறது. நாட்டிற்குள் வரும் அனைத்து போதைப் பொருட்களையும் நாம் கைப்பற்றவில்லை. அனைத்தையும் கைப்பற்றினால் அவை நாட்டிற்குள் வராது. அவர்கள் அனுப்பும் தொகையில் சிறு தொகையே கைது செய்யப்படுகிறது.

எந்தளவு தொகை விநியோகிக்கப்படுகிறது என்பது கைப்பற்றும் தொகையின் மூலம் கணிக்கலாம். கருப்புப் பொருளாதாரத்தை கட்டெியெழுப்பும் வர்த்தகமாக இது மாறியுள்ளது. அதனால் அவர்களிடையே சந்தையை பங்கு போடுவதில் மோதல் காணப்படுகிறது. ஒவ்வொரு குழுக்களுக்கிடையில் துப்பாக்கிச் சூடு நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரதேச எல்லைகளுக்கு மற்றைய தரப்பு நுழைய முடியாது. போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டதாகவே இந்த கொலைகள் நடைபெறுகின்றன.

பொதுச் சமூகத்தின் பாதுகாப்பிற்காவே அரச பொறிமுறையொன்று உள்ளது. ஆனால் அவர்களிடமுள்ள பண பலத்தினால் அரச பொறிமுறை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இனிமேலும் இதனை மறைத்து இந்தப் பிரச்சினைக்கு முகங்கொடுக்க முடியாது. அவர்களிடையே ஆயுதங்கள் உள்ளன. அனுமதிப் பத்திரத்துடன் ஆயுதங்களை பயன்படுத்தும் அதிகாரம் அரசாங்கத்திற்கே உள்ளது.

அரசிடம் இருக்க வேண்டிய ஆயுதங்கள் எவ்வாறு அவர்கள் கைகளுக்குச் சென்றது? சில இராணுவ முகாங்களில் இருந்து 73 ரீ 56 ரக துப்பாக்கிகள் அவர்களின் கைகளுக்குச் சென்றுள்ளன. அதில் சுமார் 35 துப்பாக்கிகள் மீளப் பெறப்பட்டுள்ளன. அதற்குப் பயன்படுத்தும் ரவைகள் பிடிபட்டுள்ளன.

இராணுவ கேர்னல் ஒருவர் தான் இவற்றை வழங்கியுள்ளார். அதற்காக அவரின் வங்கிக் கணக்கிற்கு பணம் கிடைத்துள்ளது. ஒரு பொலிஸ் அதிகாரி தனது ஆயுதத்தை விற்பனை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். அந்த ஆயுதக் குழுக்களிடமுள்ள பண பலத்தினால் இவை நிகழ்ந்துள்ளன.

இது தொடர்பான விசாரணைகளில் பொலிஸ் அதிகாரிகளின் தொடர்பு வெளிப்பட்டுள்ளது. இராணுவம்,கடற்படை,விமானப்படை மற்றும் பொலிஸ் என்பன இதனைத் தடுக்க பெரும் பங்காற்றுகின்றன. ஆனால் விரல்விட்டு எண்ணக் கூடியவர்கள் அந்த கும்பலின் பண பலத்தில் சிக்கியுள்ளனர்.

தேசிய பாதுகாப்பு, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்குள் கருப்பு ஆட்சி உருவாக்கப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் வாகனங்கள் இன்றி வாகன இலக்கத்தகடுகள் வழங்கப்பட்டுள்ளன.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திலுள்ள சிலர் சட்டவிரோத வாகனங்கள் பாவனைக்கு வர பங்களித்துள்ளனர். குடிவரவு குடியகல்வு திணைக்களம் தேசிய பாதுகாப்பிற்காக பங்களிக்கும் நிறுவனம். ஆனால் சில அதிகாரிகள் பாதாள தலைவர்களுக்கு கடவுச்சீட்டு தயாரித்து வழங்கியுள்ளனர். இவ்வாறு தான் அரச கட்டமைப்பிற்குள் இந்தப் பேரழிவு நுழைந்துள்ளது.

சுங்கத்திணைக்களத்திலுள்ள சிலருக்கும் இந்தச் கும்பலுடன் தொடர்பு உள்ளது. அதனால் உத்தியோகபூர்வ அரசாங்கம் இருப்பதைப் போன்று அதே அளவு பலமாக இல்லாவிட்டாலும் அவர்களுக்குத் தேவையானவற்றை வழங்கும் அரச பொறிமுறையொன்றை தம்பிடியில் வைத்துள்ளனர். வெளிப்படையான அரசாங்கத்தைப் போன்றே மறைவான கருப்பு ஆட்சியொன்று உருவாகியுள்ளது.

இந்த நாட்டில் இரண்டு ஆட்சிகள் இருக்க முடியாது. மக்களின் ஜனநாயக ஆணையினால் உருவான ஆட்சி மாத்திரமே இருக்க முடியும். கருப்பு ஆட்சி ஒழிக்கப்படும் என உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறோம்.

அரசியல் கட்சிகளுக்குள்ளேயும் அவை நுழைந்துள்ளன. சிலர் மக்கள் பிரதிநிதிகள் ஆகின்றனர். உள்ளுராட்சி தலைவர்களாக தெரிவாகின்றனர். தனியான பட்டியல் தயாரித்து தேர்தலில் போட்டியிட சிலர் தயாராகி இருந்தனர். ஆட்சி அதிகாரம் ,எம்.பிகள் உருவாக்குவது வரையான ஆரம்ப விதை நடப்பட்டுள்ளது. இதனை அடையாளங் கண்டுள்ளோம்.

இந்த நிலை தானாக உருவானதல்ல. நீண்ட காலமாக அரசியல் மற்றும் சில அரச அதிகாரிகளின் ஆசிர்வாதத்துடன் தான் இது உருவானது. பிரஜைகள் அச்சத்துடன் உள்ளனர். சில வர்த்தகர்கள் இதிலிருந்து ஒதுங்க அஞ்சுகின்றனர்.போதைப் பொருள் விற்பனை செய்வதில் இருந்து ஒதுங்கினால் சுடப்படுகின்றனர்.

இதன்பின்னணியில் தெளிவான அரசியல் ஆசிர்வாதம் உள்ளது.அதிகாரிகளின் ஆதரவு இருக்கிறது. சிலருடைய சொத்துக்களை பார்த்தால் உழைப்பின் ஊடாக இந்தளவு சொத்துக்களை ஈட்ட முடியாது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் தீர்க்கமான கட்டத்திற்கு வர வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது. நாம் இதனைச் செய்யாவிட்டால் வேறு யாரும் செய்ய மாட்டார்கள் என எம்மிடம் பலரும் கூறியுள்ளனர். இதனை மாத்திரம் நிறைவேற்றுங்கள் புண்ணியம் கிடைக்கும் என சில தாய்மார் கூறுகின்றனர். பொலிஸ் மா அதிபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் பலரும் இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை தோற்கடிக்க பொலிஸை சுத்தம் செய்ய வேண்டும் என்பதை ஏற்கிறோம். தகவல்களை பொலிஸாருக்கு வழங்கினால் மறு நிமிடமே வீட்டுக்கு வருவர் என கிராமங்களில் சொல்வார்கள். இதனை முடிவுக்குக் கொண்டுவர பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் பொலிஸ்மா அதிபரும் பெரு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

அநேகமான பொலிஸார் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உடனடியாக அந்த வலையமைப்பில் இருந்து அகன்று செல்லுமாறு ஏனைய தரங்களில் உள்ளோரிடம் கோருகிறோம். உங்கள் தொழிலின் பாதுகாப்பு சீருடையின் கௌரவத்தை பாதுகாத்து அகன்று செல்லாவிட்டால் நாம் அவர்களை நீக்குவோம்.

பொதுமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் நிறுவனங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு முரணாக செயற்படுவது எந்தளவு பாரதூரமானது. எனவே இதற்கு அனைத்துவிதமான ஒத்துழைப்புகளையும் வழங்கும் அரச அதிகாரிகள் உடனடியாக அந்த செயற்பாட்டில் இருந்து அகன்று செல்லுமாறு கோருகிறோம். சட்டத்தின் மீதான பாரிய மரியாதைக்குரிய நிறுவனங்கள் வரை இந்த பேரழிவு பரவியுள்ளது. இனியும் அவர்கள் மறைவானவர்கள் அல்ல. அவர்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் எமக்குத் தெரியும்.

போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் உடனடியாக போதைப் பொருள் பாவனையில் இருந்து அகன்று செல்ல வேண்டும். உங்களை கவனித்துக் கொள்ள நாம் தயார். அவர்கள் எமது பிள்ளைகள். பொருளாதாரப் பிரச்சனை, விளையாட்டு,கலாச்சாரம்.இசை, பொழுதுபோக்கு என எதுவும் இன்றி ஒரே பொழுது போக்கு போதையாக இருப்பது என அடிமையானவர்கள் கருதுகிறார்கள். அது அவர்களுடைய தவறல்ல.

சிறந்த விளையாட்டுக் கலாச்சாரம் உருவாக்கப்படவில்லை. பல தசாப்தங்களுக்கு முன்னர் விளையாட்டுக் கலாச்சாரம் காணப்பட்டது. இன்று அவ்வாறான கலாச்சாரம் இல்லை. எனவே அந்த இளைஞர்களுக்கு குறைசொல்லிப் பயனில்லை. எனவே பொழுதுபோக்கு சார்ந்த இடங்கள்,பாடல்,இசை,கலாச்சாரம், சமூகம் தொடர்பான பிணைப்பு தொடர்பான சமிக்ஜையை அவர்களுக்கு வழங்க வேண்டும். அதற்காக பாரிய திட்டமொன்றை ஆரம்பிக்க இருக்கிறோம்.

அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பது எமது பொறுப்பாகும். சுயமாக சென்று புனர்வாழ்வு பெறக் கூடிய சில இடங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமது பிள்ளையை ஒப்படைக்குமாறு தாய்மாருக்கு அழைப்பு விடுக்கிறோம். உங்கள் பிள்ளையை மீட்டு உங்களிடம் கையளிப்போம்.

வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இதற்காக அதிக நிதி ஒதுக்கப்படும். பல புனர்வாழ்வு மையங்களில் இருந்து இளைஞர்கள் தப்பிச் செல்கிறார்கள். இதனைத் தடுக்க விஞ்ஞான ரீதியான புனர்வாழ்வு திட்டமொன்றை தயாரித்துள்ளோம்.

போதைப் பொருள் விற்பனை செய்வோர் சரணடைய வேண்டும். தொடர்புள்ள சகல அரச நிறுவனங்களையும் இணைத்து தேசிய செயற்பாட்டு மையம் ஒன்றை உருவாக்க இருக்கிறோம்.

சுங்கம், குடிவரவு குடியகல்வு திணைக்களம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்,போலிஸ், இராணுவம்.புலனாய்வுப் பிரிவு என்பன உள்ளடங்கிய மையம் உருவாக்கப்படும். தப்பிச் சென்றவர்கள் மறைந்துள்ள நாடுகள் எமக்குத் தெரியும். இருக்கும் இடமும் தெரியும்.

எனவே அவர்கள் சரணடைய வேண்டும்.சுற்றிவளைப்புகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம். எமது நாட்டையும் சமூகத்தையும் பிள்ளைகளையும் ஒரு சிறு குழுவுக்கு இறையாக்க முடியாது.

பிக்குமார் மற்றும் மதத்தலைவர்கள் உள்ளடக்கிய செயற்பாடு தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம். எமது மக்கள் மதத்தலங்களுடன் அதிகமான தொடர்பை வைத்துள்ளனர். இந்த பேரழிவுக்கு எதிரான பிரதான ஆயுதமாக அதனை பயன்படுத்தலாம். பலங்கொடை பகுதியில் போதைக்கு அடிமையானவர்களின் மரண வீடுகளுக்கு வர மாட்டோம் என பள்ளிவாசல் மௌலவிமார் சொல்வதை பார்த்தோம்.

அதே போன்று சகல மதத் தலைவர்களும் இந்த பேரழிவுக்கு எதிரான நிலைப்பாட்டை உருவாக்கினால் இதனை தோற்கடிக்கலாம். இதிலிருந்து மீள போராடுவோம். அதற்கு மதத் தலைவர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.

ஊடகங்கள் விழுமியங்களுக்கு உட்பட்டு செயற்படாத துறையாக காணப்படுகிறது. போட்டிக்காக செயற்படுகின்றன. ஆனால் போதைப் பொருட்கள் தொடர்பான செய்திகளை வெளியிடுவதில் கட்டுக்கோப்புடன் ஊடகங்கள் செயற்படும் என எதிர்பார்க்கிறேன்.

இதனை ஊக்கப்படுத்தும் வகையிலான செய்தி வெளியிடப்படுவதை காண்கிறோம். சிலருடான தொலைபேசி உரையாடல்கள் ஊடாக அவர்களை வீரர்களாக காண்பிக்கப்படுகின்றனர். ஊடக நிறுவன உரிமையாளர்களை சந்தித்து பேசிய போது பெரும்பாலானவர்கள் இதற்கு ஒத்துழைக்க உடன்பாடு தெரிவித்தனர்.

புனர்வாழ்வு நடவடிக்கையில் பல அரச சார்பற்ற நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. சகல தரப்பினரையும் இணைத்து புனர்வாழ்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க இருக்கிறோம்.

போதைப் பொருள் ஒழிப்பில் அரசியல் அதிகாரத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. அரசியல்வாதிகளுடன் நெருங்கிப் பழகி அவர்களின் தேவைகளை நிறைவேற்றி மறைவான அதிகாரத்தை போதைபொருள் வர்த்தகர்கள் பெறுகிறார்கள். சில அரச பொறிமுறையில் நுழைந்து விசாரணைகளை தடுக்கவும் வீதியில் சுட்டுக் கொலை செய்வதற்கும் இந்த மறைவான அதிகாரத்தை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

எமது பொலிஸார் திறமையானவர்கள். சர்ச்சைக்குரிய விடயங்களில் துரிதமாக குற்றவாளிகளை கைது செய்யும் திறமை அவர்களுக்கு உள்ளது. கண்டுபிடிக்கப்படாத அனைத்து குற்றங்களின் பின்னாலும் அரசியல்வாதியின் பாதுகாப்பு உள்ளது.

லசந்த கொலை, தாஜுதீன் கொலை,ரோகன குமாரவின் கொலை, ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் ஏன் தீர்க்கப்படவில்லை. அரசியல் பாதுகாப்பினாலே அவை கண்டுபிடிக்கப்படவில்லை. பொலிஸாருக்கு உரிய அதிகாரம் வழங்காமையினால் இந்த நிலை ஏற்பட்டது. போதைப்பொருள் ,பாதாள உலகம் என்பன அவ்வாறு தான் வளர்ச்சியடைந்தன.

அவர்களின் முதலாவது அதிகாரமான அரசியல் அதிகாரம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. சில குற்றச்செயல்கள் சிறைச்சாலைகளுக்குள் இருந்து முன்னெடுக்கப்படுகிறது. சில தவறுகளை சிறைச்சாலையில் இருந்து நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வெலிகம சம்பவம் அவ்வாறான ஒன்று.

சிலர் பயத்தினாலும் சிலர் பணத்தினாலும் இதற்கு உதவுகிறார்கள். இலங்கை பொலிஸ் இதிலுள்ள ஆபத்தை அறிந்த நிலையில் இதனை முறியடிக்க அர்ப்பணித்துள்ளது.

எதிர்காலத்தில் மேலும் சில பொலிஸ் அதிகாரிகள் குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்படலாம். முறையாக செய்தால் விமர்சனம் வரும். உங்களுக்கு சுதந்திரமாக செயற்பட அதிகாரத்தை வழங்குகிறோம். இந்தப் பேரழிவை முடிவுக்குக் கொண்டு வருவோம்.

இந்தச் செயற்பாட்டில் மக்களை இணைத்துச் செயற்பட வேண்டும். கிராமம் வரையாக பரந்த மக்கள் இயக்கம் முன்னெடுக்கப்படும். முன்பு குற்றவாளிகளை ஊரில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் இணைத்துக் கொள்வதில்லை. ஆனால் இன்று அவர்கள் நிகழ்வுகளில் பிரதம அதிதியாக தேசிய கொடிஏற்றுகின்றனர்.

கிராம சேவகர் மட்டம் வரை பரந்த மக்கள் இயக்கம் உருவாக்கப்படும். அது தான் இந்த பேரழிவுக்கு எதிரான பிரதானமான பாதுகாவலராகும். பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.மக்களிடம் இருந்து இதற்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.

முழு நாடுமே ஒன்றாக இந்த முன்னெடுப்பில் இணைய வேண்டும். அரசாங்கத்தினாலோ பொலிஸாரினாலோ அரச பொறிமுறையினாலே இதனை தனியாக மேற்கொள்ள முடியாது. இதற்கு எதிராக பாரிய மக்கள் இயக்கத்தை உருவாக்கி வருகிறோம்.

எனவே போதைப்பொருட்களை விற்பனை செய்யும் மற்றும் அடிமையானவர்கள் அதிலிருந்து அகன்று செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த மக்கள் இயக்கம் இந்த மாயச் சூறாவளியை அழித்தொழிக்கும். இந்த மாயச் சூறாவளியில் இருந்து எமது பிள்ளைகளையும் சமூகத்தையும் நாட்டையும் மீட்போம்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மல்வத்து அஸ்கிரிய அனுநாயக்க தேரர்கள் தலைமையிலான மகா சங்கத்தினர், கத்தோலிக்க, இந்து மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்கள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அமைச்சர்கள், ஆளுநர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் ஏனைய இராஜதந்திரிகள், ஜனாதிபதியின் செயலாளர் , அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படைகளின் பிரதானிகள், அறிஞர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles