போர் நிறுத்தம் தொடர்பான அமைதி திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ளவதாக அறிவித்த உடன், காசாவில் குண்டுவீசி தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என இஸ்ரேலுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் கடுமையாக தாக்கி வருகிறது. இந்த போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
இந்நிலையில் அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஜனாதிபதி டிரம்ப்பை சந்தித்து பேசியிருந்தார். அப்போது காசாவில் போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை ஏற்க அவர் சம்மதம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த ஒப்பந்தம் ஹமாஸ் அமைப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது, ஹமாஸ் அமைப்பு டிரம்ப் திட்டத்தினை ஏற்று, இஸ்ரேல் பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க சம்மதித்துள்ளன.
தற்போது இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்த முயற்சி இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்நிலையில் காசாவில் குண்டுவீசி தாக்குதல் நடத்துவதை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு டிரம்ப் உத்தரவிட்டார்.
இது குறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் அவர்கள் அமைதிக்கு தயாராக இருப்பதாக நான் நம்புகிறேன். காசா மீதான குண்டுவீச்சை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும்.
அப்போது தான் பிணைக் கைதிகள் அனைவரையும் பாதுகாப்பாகவும், விரைவாக மீட்க முடியும்.
தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் குறித்து நாங்கள் ஏற்கனவே விவாதித்து வருகிறோம். இது காசா பிரச்னை மட்டும் கிடையாது. மத்திய கிழக்கில் நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டியது.” – எனவும் டர்ம்ப் குறிப்பிட்டுள்ளார்.