உக்ரைனுக்கு போர் டாங்கிகள் மற்றும் நீண்ட தூர ஏவுகணை அமைப்புகள் போன்ற கனரக ஆயுதங்களை நேட்டோ வழங்கினால் போர் “மிக ஆபத்தான” கட்டத்திற்கு விரிவடையும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.
ரஷ்யாவுடனான தாக்குதல்களை தீவிரப்படுத்தும் வகையில் உக்ரைனுக்கு மேலும் சக்திவாய்ந்த இராணுவ உபகரணங்களை வழங்குவதற்கு மேற்குலக நாடுகள் உறுதி அளித்திருக்கும் நிலையிலேயே ரஷ்யா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதில் கவச வாகனங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் உட்பட 2.5 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா உறுதி அளித்துள்ளது. பல நூறு ஏவுகணைகள் உட்பட ஆயுதங்களை வழங்க பல ஐரோப்பிய நாடுகள் உறுதி அளித்துள்ளன.
குறிப்பாக உக்ரைனுக்கு போர் டாங்கிகளை வழங்க ஜெர்மனிக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. போதுமான கனரக ஆயுதங்கள் கிடைக்காதது பற்றி உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி கடும் வேதனையை வெளியிட்டிருந்தார். சலஞ்சர்ஸ் 2 டாங்கிகளை உக்ரைனுக்கு வழங்க பிரிட்டன் கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து ஜெர்மனி லெபார்ட் 2 டாங்கிகள் அல்லது ஜெர்மனி தயாரிப்பு டாங்கிகளை போலந்து வழங்க அனுமதிப்பதற்கு ஜெர்மனி மீது அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
ரஷ்ய படைகள் மற்றும் நிலங்கள் மீது தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட கனரக ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கக் கூடாது என மேற்கத்திய நாடுகளை ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
“இது மிக அபாயகரமானது. இதனால் மோதல் முழுமையாக புதிய கட்டத்திற்கு இட்டுச்செல்லும். நிச்சயமாக, உலகளாவிய மற்றும் ஐரோப்பிய பாதுகாப்புக்கு நல்லதாக அமையாது” என்று ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கொவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ரஷ்யாவையோ அல்லது 2014இல் உக்ரைனில் இருந்து இணைக்கப்பட்ட கிரிமியா தீபகற்பத்தையோ குறிவைத்து மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களைப் பயன்படுத்தினால், ரஷ்யா பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர் அனடோலி அன்டோனோவ் கூறியுள்ளார்.
மறுபுறம், மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவது அணு ஆயுதப் போருக்கு இட்டுச் செல்லும் என்று ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மட்வெடேவ் எச்சரித்துள்ளது.
“அணு சக்தி நாடு ஒன்று சம்பிரதாயப் போர் ஒன்றில் தோற்பது அணு ஆயுதப் போரைத் தூண்டும்” என்று டெலிகிராம் செயலியில் மட்வெடேவ் எச்சரித்துள்ளார். மேற்கத்திய போர் டாங்கிகளை வழங்குவதன் காரணமாக உக்ரைனிய போர் விரிவடையும் அச்சுறுத்தலை சமாளிக்க முடியும் என்று நேட்டோவின் ஐரோப்பிய கட்டளை தளபதி குறிப்பிட்டுள்ளார்.