மக்களின் போராட்டங்களுக்கு மதிப்பளித்து ராஜபக்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்!

நாட்டை ஆளக்கூடிய தரப்புக்கு வழிவிட்டு உடனடியாக ராஜபக்சர்கள் பதவி விலக வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது,

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடியாக பதவி விலக நாட்டை சரியாக வழிநடத்தக்கூடிய தரப்புக்கு வழிவிட வேண்டுமெனப்தே நாட்டு மக்களின் கோரிக்கையாக உள்ளது. இதனைவிடுத்து மக்களை முட்டாள்களாக்கும் முயற்சியில் அரசாங்கம் செயல்படக்கூடாது.

ராஜபக்சர்கள் கொள்ளையடித்த அனைத்து பணத்தையும் நாட்டுக்கு வழங்கிவிட்டு செல்ல வேண்டும் என்பதே மக்களின் போராட்டங்கள் ஊடாக வெளிப்படுத்தப்படும் கருத்தாகவும் உள்ளது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காகது ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல்படும் இந்த அரசாங்கம் மீண்டும் அமைச்சரவையில் மாற்றத்தை செய்து எதனைச் சாதிக்கப் போகிறது.

ராஜபக்சர்கள் தலைமையிலான எந்தவொரு அரசாங்கமும் வேண்டாம் என்பதில் மக்கள் உறுதியாகவுள்ளனர். புதிய அமைச்சரவையின் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை காண முடியாது. மீண்டும் மீண்டும் நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள்ளே இவர்களால் தள்ள முடியும்.

இன்று ஏற்பட்டுள்ள அத்தனை பிரச்சினைகளுக்கும் பொறுப்புக்கூற வேண்டிய ராஜபக்சர்கள் என்பதை மறந்துவிட்டு அமைச்சரவையை  மாற்றுகிறோம், இளைஞர்களுக்கு அமைச்சுப் பொறுப்புகளை வழங்குகிறோம் என்றுகூறுவது மக்களை மேலும் அதிருப்தியடைய செய்துள்ளது.

காலி முகத்திடலில் எந்தவொரு கட்சியும் சாராத பொது மக்களே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதான் நாட்டு மக்கள் அனைவரும் உண்மையான உணர்வும்கூட. ஆகவே, ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து ஆட்சி அதிகாரத்தை கையளித்துவிட்டு ராஜபக்ஸர்கள் நாட்டை ஆளக்கூடிய தரப்புக்கு வழிவிட வேண்டும் என்றார்.

Related Articles

Latest Articles