நாட்டை மீட்பதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக சர்வக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டில் பொருட்கள், சேவைகளின் விலைகள் வானுயர அதிகரித்துள்ளன. மக்கள்மீது பொருளாதார சுமைகள் திணிக்கப்பட்டுள்ளன. இந்நிலைமையில் இருந்து மக்கள் மீட்பது பற்றி சிந்திக்க வேண்டும். அவ்வாறு இல்லையேல் கடும் அதிருப்தியில் மக்கள் எவ்வாறான முடிவை எடுப்பார்கள் என தெரியவில்லை.
எனவே, இந்நிலைமையில் இருந்து நாட்டை மீட்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து நிலைமையை தெளிவுபடுத்த வேண்டும்.
நாட்டை மீட்பதற்கான அரசியல் வேலைத்திட்டமும், ஏனைய தரப்புகளின் வேலைத்திட்டங்களும் முன்வைக்கப்பட்டு காத்திரமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
எந்தவொரு கட்சியாலும் தனித்து செயற்பட்டு இந்த நாட்டை மீட்க முடியாத சூழ்நிலையே காணப்படுகின்றது. எனவே, அனைத்து தரப்புகளும் வட்டமேசைக்கு வந்து பேச்சு நடத்தி, இணக்கத்துக்கு வர வேண்டும். அவ்வாறு இல்லையேல் மக்கள் கிளர்ந்தெழுவார்கள்.” -என்றார்.










