மஞ்சுல சுரவீர மன்னிப்பு கோர வேண்டும்!

பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரவின் சமீபத்திய பேச்சு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமணத்தை நோக்கி முன்வைக்கப்பட்ட தனிப்பட்ட விமர்சனமாகும் என தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் இன்று (14) கண்டியில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மஞ்சுள சுரவீரவின் இந்தக் கருத்து, மக்கள் விடுதலை முன்னணியின் அடிமனதில் பதிந்துள்ள இந்திய விஸ்தரிப்பு வாத அச்சத்தை அரசியல் ஆயுதமாக்கும் முயற்சியாகவும், ஜீவன் தொண்டமான் போன்ற இந்திய வம்சாவளித் தலைவர்களின் இயல்பான குடும்ப மற்றும் கலாச்சாரப் பிணைப்புகளையே வெளிநாட்டு சதி என சித்தரித்து அவர்களை அரசியல் மற்றும் சமூக ரீதியாக தாழ்வுபடுத்தும் செயலாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் தமிழக மக்களுடன் இரத்தத் தொடர்பை பகிர்ந்து கொள்கின்றனர் என்பதையும், தமிழகத்துடனான திருமணப் பந்தம் மிகவும் இயல்பான ஒன்று என்பதையும் கனகராஜ் வலியுறுத்தினார். தனிப்பட்ட திருமண உறவை அரசியல் ஆயுதமாக மாற்றுவது தரமற்ற குறுகிய மனப்பான்மையுடையவர்களின் செயல் எனவும், மஞ்சுள சுரவீர இனவாத பேச்சுக்கு புதிய வடிவம் கொடுக்க முயற்சிக்கிறாரா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த தாக்குதல் ஜீவன் தொண்டமானை மட்டுமல்ல, இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களை முழுமையாக அவமானப்படுத்தும் முயற்சியாகும் என அவர் கண்டனம் தெரிவித்தார்.

தொண்டமான் குடும்பம் நான்கு தலைமுறைகளாக பாராளுமன்றத்தில் செயல்பட்டு வருவதையும், இவர்களைப் பற்றி தரமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது மஞ்சுள சுரவீர சார்ந்துள்ள சமூகத்தின் மதிப்பை குறைத்து காட்டும் செயல் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டை கைப்பற்றுவதற்காக குவேணியை மணந்து பின்னர் அவரை கைவிட்டு இந்தியத் தமிழ் பெண்களை அழைத்து வந்து திருமணம் செய்துகொண்டவர்களாலேயே வரலாறு நிரம்பியிருக்கின்ற நிலையில், இந்தியத் திருமணப் பந்தங்கள் குறித்து இவ்வாறு பேசுவது வேடிக்கையாக உள்ளது என்றும் கனகராஜ் தெரிவித்தார்.

மஞ்சுள சுரவீரவின் கருத்துக்கள் காரணமாக இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கனகராஜ் வலியுறுத்தினார். சுரவீர தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர் என்பதால், இதற்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கும் உண்டு என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles