மட்டக்குதிரைகளால் நுவரெலியாவில் அதிகரிக்கும் விபத்துகள்! இன்றும் இருவர் படுகாயம்!! மாநகரசபை அசமந்தம்

நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர் படுகாயமடைந்துள்ளனர்.

இரு இளைஞர்கள் மார்காஸ் தோட்ட பகுதியில் இருந்து நுவரெலியா பிரதான நகரை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணிக்கும்போது, மட்டக்குதிரை Pony ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா-கண்டி , நுவரெலியா – உடப்புசல்லாவ, நுவரெலியா – பதுளை போன்ற வீதிகள் பிரதான போக்குவரத்து வீதியாக இருந்து வருகிறது. இந்த வீதிகளில் பகல் நேரம் மட்டுமன்றி, இரவு நேரங்களிலும் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

அரசு மற்றும் தனியார் பேருந்துக்கள், பாடசாலை வாகனங்கள், அரசுத்துறை சார்ந்த வாகனங்கள், கனரக வாகனங்கள் முதல் சிறிய ரக வாகனங்கள் வரை இந்த சாலையில் செல்கின்றன. போக்குவரத்து மிகுந்த இந்த வீதியில் 30-க்கும் மேற்பட்ட மட்டக்குதிரைகள் தினமும் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக வீதியில்ஆங்காங்கே படுத்து ஓய்வெடுக்கின்றன இதனால் வாகன சாரதிகள் , குறிப்பாக இருசக்கர வாகனங்களும் , முச்சக்கரவண்டிகளும் அதிகமாக
மட்டக்குதிரை நகரும் திசையை கணிக்க முடியாமல் மோதி விபத்தில் சிக்கி வருகின்றனர்.

இதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதும், காயமடைவதும் தொடர் கதையாகி வருகிறது என குற்றம் சுமத்துகின்றனர்.

தொடர்ந்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்புக்கள் நிகழும் முன்பு பிரதான வீதிகளில் சுற்றித்திரியும் மட்டக்குதிரைகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , இப்பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து மட்டக்குதிரை வளர்ப்போருக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி , அதையும் மீறும் பட்சத்தில் மட்டக்குதிரையை பறிமுதல் செய்து அதிகரித்த தண்டப்பணத்தை விதிக்க வேண்டும் என பொது மக்களும் ,வாகன சாரதிகளும் கோரிக்கை விடுக்கின்றனர்.

நானுஓயா நிருபர்

Related Articles

Latest Articles