“ வாக்கு என்பது எங்கள் உரிமை. அதனை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக்கொடுக்ககூடாது. ஆயிரம் வேலைகள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கிவைத்துவிட்டு ஆகஸ்ட் 5 ஆம் திகதி ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம்.” – என்று ‘மலையக உரிமைக் குரல்’ என்ற சிவில் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில் அவ்வமைப்பின் தலைமைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
“இலங்கைவாழ் மக்களுக்கு 1931 ஆம் ஆண்டு டொனமூர் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பிரகாரமே சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டது. அன்று முதல் இன்றுவரை இலங்கைவாழ் மக்கள் வாக்குரிமையைப்பயன்படுத்திவருகின்றனர். ஆனால், 100 வீத வாக்குபதிவு என்பது இன்னமும் எட்டாக்கனியாகவே இருப்பது கவலைக்குரிய விடயமாகும். குறைந்தபட்சம் 90 வீதத்துக்கும் மேலாவது வாக்களிப்பு இடம்பெறவேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
மலையக தமிழர்களின் குடியுரிமையும், வாக்குரிமையும் 1948 இல் பறிக்கப்பட்டது. இதனால் அவர்கள் அரசியல் ரீதியில் அநாதைகளாக்கப்பட்டனர். 1988 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குடியுரிமையும், வாக்குரிமையும் வழங்கப்பட்டிருந்தாலும் அனைவருக்கும் வாக்குரிமை கிடைப்பதற்கு 2002வரை காலமெடுத்தது.
பல போராட்டங்களுக்கும், தியாகங்களுக்கும் மத்தியிலேயே வாக்குரிமையை வென்றெடுத்தோம். அவ்வுரிமை இல்லாதபோது இருந்த பெறுமதி தற்போது சிலருக்கு புரிவதில்லை. அதனால்தான் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. மேலும் சிலர் ஏனோ தானோவென வாக்களிப்பதால் அவை நிராகரிக்கப்படுகின்றன. இந்நிலைமை மாறவேண்டும். இம்முறை உரிய வகையில் வாக்குரிமையப் பயன்படுத்துவோம்.
மக்களுக்காக மக்கள் அரசியல் நடத்தக்கூடிய, கொள்கைகளை முன்னிறுத்தி செயற்படக்கூடிய வேட்பாளர்களை ஆதரிப்போம். ஜனநாயகத்துக்கும், மனித உரிமைகளுக்கும் சவால் விடுக்கும் வேட்பாளர்களை நிராகரிப்போம்.
ஆகஸ்ட் 5 ஆம் திகதி மாலைவரை காத்திருக்காமல் காலையிலேயே சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வாக்களிப்பு நிலையங்களுக்குச்சென்று சமூக இடைவெளியைப்பின்பற்றி ஜனநாயக கடமையை நிறைவேற்றுமாறும், வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் வாக்களிப்புக்கு தேவையான ஆவணங்கள் உள்ளனவா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம். ” – என்றுள்ளது.