ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக 30.1 பிரேரணை கொண்டு வரப்பட்டது. 30.1 பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட பல விடயங்கள் இலங்கையின் அரசியலமைப்புக்கும் சுயாதீனத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நன்கு அறிந்தும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குவதாக தனது தனிப்பட்ட விருப்பத்தை அரசாங்கத்தின் தீர்மானமாக தெரிவித்தார். இதன் தாக்கம் இன்றும் தொடர்கிறதென பொது மக்கள்பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒரு தலைபட்சமானது. தமிழ் மக்களை அரசாங்கம் புறக்கணிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இல்லாத பிரச்சினைகளை இருப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஒரு தரப்பினர் சர்வதேச அரங்கில் இலாபமடைகிறார்களென வீரசேகர தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை நாட்டின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் ஒரு தலைப்பட்சமான கொள்கை அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதென்பதை அறிய முடிகிறது.
தமிழ் பேசும் மக்களை அரசாங்கம் புறக்கணித்து செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது. 2019ஆம் ஆண்டு ஆட்சியமைத்த அரசாங்கம் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படவில்லை.
அனைத்து இன மக்களுக்கும் அனைத்து நிலைகளிலும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கம் இன நல்லிணக்கம் என்று செய்த தவறுகளை திருத்தும் போது அதனை இன புறக்கணிப்பு என்று கருதுவது தவறான நிலைப்பாடாகும்.
30 வருட கால சிவில் யுத்தம் முடிவடைந்த பிறகு அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்தியது. இறுதிக்கட்ட யுத்தத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டன. சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான விசாரணை நடவடிக்கைகள் அக்காலக் கட்டத்தில் உள்ளக பொறிமுறை ஊடாக முன்னெடுக்கப்பட்டன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
