மனித குலத்திற்கு எதிரான மும்பைத் தாக்குதலுக்கு 14 ஆண்டுகள்! பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுப்பது ஏன்?

2008ஆம் ஆண்டு முழு உலகத்தையும் உலுக்கிய மும்பைத் தாக்குதலுக்கு 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக ஊடுருவிய பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியிருந்தனர். லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தீவிரவாதிகள், மனித குலத்திற்கு எதிரான இந்தத் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டிருந்தனர்.

மும்மையின் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தி ஓபராய் ஹோட்டல், தாஜ் ஹோட்டல், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் இந்தக் கொடூர தாக்குதல் அரங்கேற்றப்பட்டது. இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள், வெளிநாட்டினர் உள்ளிட்ட 166 பேர் கொல்லப்பட்டனர். பச்சிலம் குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். 320க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் இன்றும் வடுக்களை சுமக்கின்றனர்.

இந்தத் தாக்குதலை திட்டமிட்டது யார்? அவர்களை இயக்கியது யார்? அதற்கு அடைக்கலம் கொடுத்தது யார்? தாக்குதல் நடத்தவந்து, உயிருடன் பிடிபட்ட ஒரே தீவிரவாதி அஜ்மல் கசாப். அந்த பயங்கரவாதி நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் நவம்பர் 21ஆம் திகதி, 2012 அன்று தூக்கிலிடப்பட்டார். ஆனால் தாக்குதலைத் திட்டமிட்ட இயக்கமும், அந்த இயக்கத்திற்கு அடைக்கலம் கொடுக்கும் தரப்புக்களும் இன்னும் சுதந்திரமாக செயற்படுகிறது.

இந்த தாக்குதலில் அப்போதைய பயங்கரவாத எதிர்ப்பு படை (ATS) தலைவர் ஹேமந்த் கர்கரே, இராணுவ மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன், மும்பை மேலதிக பொலிஸ் ஆணையாளர், சிரேஸ்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர் விஜய் சலாஸ்கர் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.

நவம்பர் 26 அன்று தொடங்கிய தாக்குதல் நவம்பர் 29 வரை நீடித்தது. சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ், ஓபராய் ட்ரைடெண்ட், தாஜ்மஹால் அரண்மனை மற்றும் கோபுரம், லியோபோல்ட் கபே, காமா மருத்துவமனை, நாரிமன் ஹவுஸ் யூத சமூக மையம் ஆகியவை பயங்கரவாதிகளால் குறிவைக்கப்பட்ட சில இடங்கள்.

26/11 மும்பை தாக்குதலின் 14 வது ஆண்டு நிறைவடைந்த நிலையில், உயிர்த் தியாகம் செய்த பாதுகாப்புத் தரப்புக்கும், காரணமே இன்றி உயிர்களைப் பலிகொடுத்த பொதுமக்களுக்கும் ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. ஆனால், இந்தக் கோரத் தாக்குதலில் காயமடைந்த அப்பாவிப் பொதுமக்கள் இன்னும் வடுக்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.

தாக்குதல் நடத்த அனுப்பப்பட்ட பயங்கரவாதிகளைப் பயிற்றுவித்த இயக்கமும், அந்த இயக்கத்திற்கு அடைக்கலம் கொடுத்து, வளர்த்த தரப்புக்கள் இன்னும் சுதந்திரமாக செயற்படுகிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக உலகமே திரண்டுள்ள நிலையிலும், இவ்வாறு மனித குலத்திற்கு எதிராக தாக்குதல் நடத்தும் தரப்புக்கள் மட்டும் தண்டிக்கப்படாமல் இருப்பது கவலைக்குரியது.

இந்தப் பயங்கரவாத இயக்கத்தை சுதந்திரமாக செயல்பட விட்டுவிட்டு, பாகிஸ்தான் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறதா? அல்லது தெரிந்தும் தெரியாமல் இருக்கிறதா? என்ற பலத்த சந்தேகம் நிலவுகிறது.

உலகமே பயங்கரவாதத்திற்கு எதிராக போர்க் கொடித் தூக்கியுள்ள நிலையில், ஒப்புக்குமட்டும், பாகிஸ்தான், இந்த பயங்கரவாதிகளை அறிக்கைள் மூலம் கண்டிக்கிறது. பாகிஸ்தான் தனது நாட்டிற்குள் செயல்பட்டுவரும் பயங்கரவாதிகளையும், செயற்பாடுகளையும் தடுக்கத் தவறியுள்ளது. அப்படியென்றால், இந்தப் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஊக்குவிக்கிறதா? அல்லது போசிக்கிறதா? என்ற பலத்த சந்தேகம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

மும்பைத் தாக்குதலைப் போல் இன்னுமொரு மிலேச்சத்தனமான தாக்குதல் நடக்கக் கூடாது என்பதே அனைவரின் பிரார்த்தனையாக இருக்கிறது. ஆனால், தாக்குதல் நடத்திய சூத்திரதாரிகள் இன்னும் சுதந்திரமாக செயல்படுவது மனித குலத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும்.

இரண்டு நாடுகளுக்கு எதிரான இராணுவ மோதல் என்பது வேறு, இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதல் என்பது வேறு. மும்மைத் தாக்குதல் என்பது மனித குலத்திற்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்.

“பயங்கரவாதம் மனித குலத்தை அச்சுறுத்துகிறது. இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டு, மேற்பார்வையிட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டார்களா என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. இவர்களுக்கு தண்டனை வழங்குவதற்காக பணியாற்றுவது, உலகெங்கிலும் உள்ள பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரதும் கடமையாகும்.

உலக அமைதிக்கும், மனித குலத்தைக் காப்பதற்கும் இவ்வாறான பயங்கரவாத இயக்கங்கள் ஒடுக்கப்பட வேண்டும். குறிப்பாக இவ்வாறான இயக்கங்களுக்கு அடைக்கலம் கொடுப்பதை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். அந்தத் தரப்புக்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தடைகள் விதிக்கப்பட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல்களைத் தவிர்த்துக் கொள்ளலாம். உலகம் அமைதியாக இருக்கும்.

Related Articles

Latest Articles