ஒரு நாடாக நாம் பல பாரதூரமான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிறோம். எல்லாப் பக்கங்களிலிருந்தும் பல்வேறு வகையான பொருளாதார மரணப் பொறிகளில் சிக்கித் தவித்து வருகிறோம். வரிகளை அதிகரிப்பதே இவ்வாறான நிலைமைகளுக்கும் போக்குகளுக்குமான அரசாங்கத்தின் தீர்வுகளாக அமைந்துள்ளன. எந்தவொரு பிரச்சினைக்கும் அரசாங்கத்தின் தீர்வு வரிகளை அதிகரிப்பதாகவே அமைந்து காணப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்து கொண்ட இணக்கப்பாடுகளின் பிரகாரம், 2028 ஆம் ஆண்டு முதல் நாம் மீண்டும் கடனை செலுத்த வேண்டும். 2033 ஆம் ஆண்டு முதல் செலுத்த முடியுமாக இருந்த கடனை 2028 ஆம் ஆண்டிலிருந்தே செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது அரசாங்கத்தின் இயலாமையினாலாகும். இவ்வாறான பலவீனமான இணக்கப்பாட்டையே எதிர்கொண்டுள்ளோம் எனவும் எதிர்க்கட்சி தலைவர் கூறினார்.
வருங்காலக் கடன்களைச் செலுத்துவதற்கான அரசாங்கத்தின் பதில் வரிகளை அதிகரித்து பொதுமக்களின் பணத்தை பிக்பொக்கட் அடைப்பதாகவே உள்ளது. நாட்டின் பிரச்சினைகளை இவ்வாறு தீர்க்க முடியாது. நாட்டில் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்கவும், நாட்டின் பொருளாதார இயங்கிகளான நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினரை ஊக்கப்படுத்தவும், அவர்களின் தொழில்களை வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டும். பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும் வகையில் அவர்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய மூலதனம் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் பொருளாதார வளர்ச்சி நிலை ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் மூலம் பொருளாதாரம் வளர்ச்சி கண்டு, பண வருமானம் கிடைத்து சுருங்கிப்போயுள்ள பொருளாதாரம் விரிவடையும். இந்த நேரத்தில் பொருளாதார விரிவாக்கத்தைத் தவிர வேறு தீர்வு நாட்டில் இல்லையென்றாலும், வரிக்கு மேல் வரியை மக்களின் தோள்களில் சுமத்தும் சூத்திரத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.










