‘மருந்து தட்டுப்பாடு’ – உடனடி நடவடிக்கைகளுக்கு ராஜித வலியுறுத்து

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் மூன்று மாதங்களில் எதிர்நோக்க நேரும் உக்கிரமான நிலையை தவிர்த்துக் கொள்ளும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அவ்வாறான நிலை ஏற்படுமானால் நாட்டு மக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்க நேரும் என சுட்டிக்காட்டிய அவர், அது தொடர்பில் அமைச்சரவையில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அது தொடர்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் சபையில் கேட்டுக் கொண்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நாட்டில் பெனடோல் உட்பட 80 வீதமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அந்த நோயாளர்களின் நிலை மோசமாகும்.

அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் நிலையில் அதனை விடுவித்துக் கொள்வதற்கு டொலரில்லாத நிலை காணப்படுகிறது.

அதனால் பெருமளவு ஏற்றுமதியாளர்கள் தமது ஏற்றுமதி நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளனர். அவ்வாறு இடம்பெற்றால் நாடு மிக மோசமான நிலையை எதிர்நோக்கும்.

புதிய மருந்துகளை பதிவு செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் கட்டிடப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்த நிலை தொடருமானால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்காலத்தில் எதிர் நோக்க நேரும். அரசாங்கம் உடனடியாக கவனித்திற்கொண்டு விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles