” மலையக மக்களுக்கு தன்னார்வமாக உதவிகளை செய்வதற்குகூட மலையக அரசியல்வாதிகள் இடமளிப்பதில்லை.” என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முத்தையா முரளிதரனின் வாழ்கை வரலாறு தொடர்பாக வெளியான ‘800’ திரைப்படத்தில் நடித்த இலங்கை கலைஞர்களுடனான சந்திப்பொன்று கொழும்பில் நேற்றிரவு (11) நடைபெற்றது.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே முரளி இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,
” ஒரு மைதானத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்றால், பாடசாலைகளுக்கு கல்வி பணிப்பாளர்கள் இருப்பார்கள். அவர்களின் அனுமதி வேண்டும். அனுமதி இல்லாமல் நடக்காது. அனுமதி கொடுக்க தயாராக இருக்க மாட்டார்கள். கஷ்டம் அதை எடுப்பதற்கு. அந்த பணிப்பாளர்கள், பாடசாலைகளிலுள்ளவர்கள் எல்லாம் அரசியலுடன் தொடர்புப்பட்டவர்கள்.
மைதானங்களை எடுத்துக் கொண்டால், அது மாநகர சபைக்கு சொந்தம். மாநகர சபை சொந்தம் யாருக்கு, அரசாங்கத்திற்கு. அதில் ஏதாவது செய்யப் போனால், அவர்களின் அனுமதி வேண்டும். அனுமதி கிடைக்காது. ஒவ்வொரு இடங்களில் முயற்சி செய்து பார்த்தோம். கிடைக்கவில்லை. நுவரெலியாவின் குதிரை பந்தய திடலில் முயற்சி செய்தோம். அதிலும் கிடைக்கவில்லை. மற்ற இடங்களில், அதாவது யாழ்ப்பாணத்தில் எல்லாம் செய்துள்ளோம்.
யாழ்ப்பாணம் ஜோன்ஸ் கல்லூரியில் விக்கெட் எல்லாம் நாங்கள் தான் செய்துகொடுத்தோம். சிமெண்ட் விக்கெட் நாடு முழுவதும் 60 முதல் 80 வரை செய்துகொடுத்துள்ளோம். இந்த மாதிரி உதவி செய்துள்ளோம். இந்த மாதிரி மலையகத்தில் செய்ய போகும் போது, அனுமதி கிடைக்கவில்லை.” என முத்தையா முரளிதரன் குறிப்பிட்டார்.
