மலையக உரிமை மீட்பு பேரவை அமைப்பினால் மஸ்கெலியா ஆதார வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்கள் வழங்கப்பட்டதை மேற்கோள் காட்டி மஸ்கெலியா சிறகுகள் ஒன்றியத்தின் தலைவரும், நவயுகம் சமூகநல நோக்கு அமைப்பின் தலைவருமான ரொமேஸ் தர்மசீலன் மலையக உரிமை மீட்பு பேரவைக்கு விசேட நன்றிகளை தெரிவித்தார்.
அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட மலையக உரிமை மீட்பு பேரவை அமைப்பானது நுவரெலியா மாவட்டத்தில் பல உணர்வுப்பூர்வமான வேலைகளை செய்து வருவதை அவதானிக்க முடிகிறது.
நாட்டினுடைய அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு நிவாரண உதவி திட்டம், ஒருபிடி அரிசி வேலைத்திட்டம் என பல பகுதிகளில் இவர்களின் பதிவுகளை அவதானிக்க முடிகிறது.
அந்த வகையில் மஸ்கெலியா பகுதியில் கிட்டதட்ட 60,000 க்கும் அதிகமான மக்கள் பயன்பெறும் மஸ்கெலியா ஆதார வைத்திய சாலைக்கு இன்றைய தினம் வைத்திய உபகரணங்கள் சிலவற்றை வழங்கி இருப்பதை அறிய முடிந்தது. ஆகவே மக்கள் தேவையறிந்து சேவை செய்யும் இவர்களின் திறமை மிக்க செயற்பாடுகளுக்கு மஸ்கெலியா பிரதேச மக்கள் சார்பாகவும், நவயுகம் சமூக நலநோக்கு அமைப்பின் சார்பாகவும், சிறகுகள் ஒன்றியத்தின் சார்பாகவும் விசேடமான நன்றிகளை தெரிவிப்பதாக அவர் கூறினார்.