மலையக தமிழர்களுக்கு தேவை அனுதாபம் அல்ல – சுயமரியாதை! ஹட்டனில் அநுர தெரிவிப்பு

” மலையக தமிழ் மக்களுக்கு இந்நாட்டில் இழைக்கப்பட்டுள்ள வரலாற்று தவறை நாம் நிச்சயம் சரிசெய்வோம், அதற்கான ஆரம்பக்கட்ட வழிகாட்டல் ஹட்டன் பிரகடனம் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.” – என்று தேசிய மக்கள் சக்தியின் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மலையகம் – 200 ஐ முன்னிட்டு ஹட்டனில் இன்று நடைபெற்ற ஹட்டன் பிரகடனம் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு கூறினார்.

அவர் கூறியவை வருமாறு,

” 1964 இல் கைச்சாத்திடப்பட்ட ஶ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் பிரகாரம் மலையக மக்கள் இந்தியாவுக்கு அனுப்பட்டனர், ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்துதான் அவர்கள் ரயில்களில் ஏற்றப்பட்டு தலைமன்னாருக்கு அனுப்பட்டனர். இதனால் ஹட்டன் மண் கண்ணீர் குளமானது. அந்த மண்ணில் இருந்ததான் நாம் உரையாற்றுகின்றோம்.

1948 இல் வெள்ளையர்கள் வெளியேறியதும், மலையக தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. 7 லட்சத்துக்கு மேற்பட்டோர் குடியுரிமையை இழந்தனர். குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே குடியுரிமை மிஞ்சியது. 49 இல் இருந்து 2003 வரை குடியுரிமை இல்லாமலேயே பலர் செத்து மடிந்தனர். குடியுரிமை கிடைத்தும், அவர்களுக்கு இன்னும் சம உரிமை கிடைக்கப்பெறவில்லை.

மலையக தமிழ் மக்களுக்கு தற்போது அனுதாபம் தேவையில்லை, சுயமரியாதையுடன் கூடிய வாழ்க்கை முறைமையே அவசியம். அதனையே அவர்கள் கோருகின்றனர். சுயமரியாதை உள்ள பிரஜையாக வாழும் நிலைமையை நாம் உருவாக்குவோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles