மலையகத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உறுதியளித்துள்ளார்.
இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் கல்வி அமைச்சருடன் பேச்சு நடத்தினார்.
மலையக கல்வி மேம்பாடு, ஆளணி பலம், பௌதீக வளம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன. குறிப்பாக ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு உடனடி நடவடிக்கையை எடுக்குமாறு ரமேஷ் எம்.பி, கல்வி அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்ற கல்வி அமைச்சர், முதற்கட்டமாக ஆயிரத்து 500 பேர் ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்படவுள்ளனர் எனக் குறிப்பிட்டார்.
தகுதியான ஆயிரத்து 500 பேர் உதவி ஆசிரியர்களாக உள்வாங்கப்பட்டு, அவர்களுக்கு 6 மாதகால பயிற்சி வழங்கப்பட்ட பின்னர் நியமனம் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
