மலையக மக்களுக்கான காணி உரிமையை, ஜிஎஸ்பி வரி சலுகை நிபந்தனையாக, வைக்க பிரான்ஸ் முன் வர வேண்டும் என்று அந்நாட்டு தூதுவரிடம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மனோ எம்பி தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதிநிதிக் குழு, கொழும்பில் உள்ள பிரான்ஸ் தூதர் ரெமி லாம்பெர்ட்டை சந்தித்து பேச்சு நடத்தியது.
கொழும்பில் உள்ள மனோ கணேசன் எம்பியின் இல்லத்தில் நடைபெற்ற, இந்தச் சந்திப்பில், தமுகூ பிரமுகர்கள், பேராசிரியர் விஜயசந்திரன், பாரத் அருள்சாமி, புஷ்பநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பில் மனோ எம்பி தன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், பின்வருமாறு கூறியுள்ளார்:
1. எனது இல்லத்தில், இலங்கைக்கான பிரெஞ்சு தூதர் ரெமி லாம்பர்ட் அவர்களை சந்தித்து, தித்வா பேரழிவால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களாக இருந்தபோதிலும், மலையக தமிழ் மக்களுக்கு — குறிப்பாக தோட்டத் தொழிலாளர்கள் — அரசின் இலங்கை மீள்-கட்டெழுப்பல் (Rebuilding SriLanka) வீடமைப்பு திட்டத்தின் கீழ் திட்டமிட்ட முறையில் விலக்கி வைக்க படுகிறார்கள் என்பதை தூதருக்கு உண்மை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தோம்.
2/ அரசின் உத்தியோகபூர்வ உறுதிமொழிகள் இருந்தபோதிலும், இடம்பெயர்ந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட வேண்டிய ரூ. 5 மில்லியன் நிதியுதவியும், காணி ஒதுக்கீடும், பெருந்தோட்ட சமூகத்திற்கு மறுக்கப்பட்டுவருகிறது. இது கவனயீனம் அல்ல. இது திட்டமிட்ட பாகுபாடு ஆகும்.
3/ மலையக சமூகத்துக்கே உரிய, இன்னும் தீர்க்கப்படாத அநீதிகள் குறித்து விவாதிக்க, தமிழ் முற்போக்கு கூட்டணி, மற்றும் சிவில் அமைப்புகள் சார்பாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களை சந்திக்க பலமுறை கோரிய போதும், அந்த கோரிக்கைகள் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
4/ இந்தப் பாகுபாட்டு நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மலையக இலங்கை மக்களுக்கு சம உரிமை, சம வளங்கள், சம மரியாதை உறுதி செய்யவும், இலங்கை அரசுடன் கூடிய தனது நல்லுறவுகளை, பிரான்ஸ் பயன் படுத்த வேண்டும் என வலியுறுத்தினோம்.
5/ மேலும், முன்னணி ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாகிய பிரான்ஸ், மலையக தமிழ் சமூகத்தின் காணி, வீட்டு உரிமைகள், இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தால், வழங்கப்படும் ஜீஎஸ்பி+ வரி சலுகைகளுக்கான நிபந்தனைகளாக முன்வைக்க பட
வேண்டும் என வலியுறுத்த வேண்டும் என்றும் நாம் கோரிக்கை விடுத்தோம்.










