” மலையக மக்களின் மேம்பாட்டுக்காக இலங்கை அரசுடன் இணைந்து இந்தியா எல்லா வகையான உதவிகளையும் வழங்கும். மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டு திட்டமும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ” – என்று இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
நாம்200 நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” 200 ஆண்டுகளாக மலையக தமிழ் மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் இலங்கையின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர். இலங்கை நாடு நலமாக இருக்க வேண்டும் என்பதற்காக மிகப்பெரிய தொண்டு ஆற்றியுள்ளனர். வலிகளை தாங்கிக்கொண்டு தேநீர் என்றாலே இலங்கைதான் என்ற நிலைக்கு இந்நாட்டை உயர்த்தியுள்ளனர்.
மலையக மக்களின் கஷ்டத்தை புரிந்துதான் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதன்படி 10 ஆயிரம் வீட்டு திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்படும். கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படும். ஆசிரியர் பயிற்சியும் வழங்கப்படும். இவ்வாறு இலங்கை அரசுடன் இணைந்து மலையக மக்களுக்காக எல்லா வகையான உதவிகளும் வழங்கப்படும்.” – என்றார்.










