” கனவு மனிதனுக்கு வாய்த்த நல்ல வரம். தனது குறிக்கோள்களை நோக்கி அவனை உந்துகிற ஆற்றல் மிகுந்த விசை கனவு. உறக்கத்தில் வருவதன்று கனவு. நம்மை உறங்க விடாமல் செய்வதுதான் கனவு என்று இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான அமரர் அப்துல் கலாம் ஐயா அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்நிலையில் அவரின் அந்த கூற்று உண்மைதான் என்பதை நிரூபித்துள்ளார் புஸல்லாவை, சரஸ்வதி மத்திய கல்லூரியில் கல்வி பயின்ற உயர்தர மாணவி ஜி.வேதராகினி.மாணவி ஜி.வேதராகினி தனது கல்லூரியில் கல்வி பயிலும்போது தான் ஒரு சட்டதரணியாக வரவேண்டும் என கனவு கண்டார். தன்னை ஒரு சட்டத்தரணியாக கருதியே செயற்பட்டார்.
தனது புத்தகங்களிலும் அப்பியாச கொப்பிகளிலும் தனது கனவு நனவாகும் என எழுதிக் கொண்டதோடு, தனக்கான சட்டதரணி முத்திரையும் பதித்துக் கொண்டார். அதுமட்டுமல்ல சிறப்பாக கல்வி கற்றார். பயிற்சிகளில் ஈடுபட்டார். இதன் பயனாக உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்து அவர் இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்துக்கு தெரிவாகியுள்ளார்.
இவருக்கு அதிபர், ஆசிரியர்கள் உட்பட பாடசாலை நிர்வாகத்தினரும், பழைய மாணவர்கள் சங்கத்தினரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கின்றனர்.
மலையக மாணவர்களே, கல்வி புரட்சிமூலமே மலையகத்தில் நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்த முடியும். எனவே, நீங்களும் இலட்சியத்தை நோக்கி பயணிக்கும் வகையில் ‘கனவு காணுங்கள். நாளை நமதாகும்.

மக்கள் செய்தியாளர் – பா.திருஞானம்
