“ மலையகத் தமிழ் மக்களின் தனித்துவமான தேசிய இருப்பை நாம் அங்கீகரிக்கின்றோம். அந்த அடிப்படையில் அவர்களுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும். மேலும் உடனடி பிரச்சினைகளுக்கு அவர்கள் தொடர்ச்சியாகக் கோரி வரும் தீர்வுகளும் வழங்கப்பட வேண்டும். இத்தீர்வுகளுக்கான போராட்டத்தில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பானது மலையகத் தமிழர்களோடு தோளோடு தோள் நிற்கும்.”
இவ்வாறு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ளார் எனக் கூறப்படும் பா. அரியநேத்திரனின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் முயற்சியின் பயனாகவே தமிழ் பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார். எனவே, தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பால்தான் தேர்தல் விஞ்ஞாபனமும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதில் இனப் பிரச்சனைக்கான நிரந்தர தீர்வு எவ்வாறு அமைய வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ள 10 யோசனைகளில் 6 ஆவது விடயமாக மலையகத் தமிழர்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
1-இனப்பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கத்தோடு உருவாக்க வேண்டிய இலங்கைத்தீவின் புதிய யாப்பானது தமிழ் மக்களை இறைமையும் சுயநிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
2-தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டால்தான் இலங்கைத் தீவின் பல்லினத் தன்மையை உறுதிப்படுத்தலாம். எனவே புதிய யாப்பு ஆனது இலங்கைத் தீவின் பன்மைத் தேசியப் பண்பை உறுதிப்படுத்தும் விதத்தில் தேசங்களின் ஒன்றிணைவாக அமைய வேண்டும். அதாவது புதிய யாப்பானது இலங்கைத் தீவு ஒரு பன்மைத் தேசிய அரசாகக கட்டமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
3-ஒற்றையாட்சிக்கு உட்பட்ட எந்த ஒரு அரசியல் தீர்வாலும் தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை ஒருபோதும் திருப்திப்படுத்த முடியாது.
4-இந்த விடயத்தில் தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதனை தாமே நிர்ணயிப்பதற்குப் பொருத்தமான பன்னாட்டு ஏற்பாடுகளைக் கோருவதற்கு உரித்துடையவர்கள்.
5-தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான அலகானது ஒன்றிணைந்த தற்போதைய வடக்கு கிழக்கு மாகாணங்களை எல்லையாகக் கொண்டு அமைய வேண்டும். குறித்த சுயநிர்ணய அலகிற்குள் முஸ்லீம் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகள் தொடர்பில் திறந்த மனதோடு பேச்சுவார்த்தை நடாத்த தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புத் தயாராக உள்ளது.
6-மலையகத் தமிழ் மக்களின் தனித்துவமான தேசிய இருப்பை நாம் அங்கீகரிக்கின்றோம். அந்த அடிப்படையில் அவர்களுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும். மேலும் உடனடி பிரச்சினைகளுக்கு அவர்கள் தொடர்ச்சியாகக் கோரி வரும் தீர்வுகளும் வழங்கப்பட வேண்டும். இத்தீர்வுகளுக்கான போராட்டத்தில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பானது மலையகத் தமிழர்களோடு தோளோடு தோள் நிற்கும்.
7-ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு நடத்திய இன அழிப்பு, போர்க் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் யாவும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பன்னாட்டு நீதித்துறைக் கட்டமைப்புக்கூடாக முழுமையாகவும் முறையாகவும் விசாரிக்கப்பட்டு, பரிகார நீதி வழங்கப்படுவதுடன், இன அழிப்புச் செயற்பாடுகள் மீள நிகழாமையை உறுதி செய்ய வேண்டும். இதுவரையிலுமான ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களின் தொகுக்கப்பட்ட அனுபவமாக ஐநா பொதுச் செயலர் பொறுப்பு கூறலை ஐநா பொதுச் சபையிடம் பாரப்படுத்துவதன் மூலம் இன அழிப்புக்கு எதிரான பன்னாட்டு விசாரணைகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றங்களிடம் பாரப்படுத்த வேண்டும்.
8-அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நிலப்பறிப்பைத் தடுக்கவும,; நமது வளங்கள் இன அழிப்பின் ஒரு பகுதியாகச் சுரண்டப்படுவதைத் தடுக்கவும் தமிழர் தாயகத்தின் தேசிய வளங்களை இயற்கையின் சமநிலை குலையாத வகையில் வினைத்திறனுடன் பயன்படுத்தவல்ல தற்சார்பு பொருளாதாரக் கட்டமைப்புக்களை நாம் உருவாக்க வேண்டும்.
இதற்கேற்ற வகையில் தமிழர் தாயகத்தின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகளையும் உள்ளுர் மற்றும் சர்வதேச முதலீடுகளையும் உள்வாங்கும் அதிகாரம் தமிழர் தேசத்துக்கு இருக்க வேண்டும்.
9- தமிழ்க் கடலில் தமிழ் மீனவர்களுடைய கடல் இறைமை உறுதி செய்யப்பட வேண்டும்.
10-ஒரு நிரந்தரத் தீர்வைக் கண்டடைவதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கத்தோடும், தமிழர் தேசத்தின் இருப்பைப் பாதுகாக்கும் நோக்கத்தோடும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கென்று பன்னாட்டு சமூகத்தின் மேற்பார்வையின்கீழ் விசேட இடைக்காலப் பாதுகாப்பு ஏற்பாடு ஒன்று( உருவாக்கப்பட வேண்டும்.
மேற்கண்ட தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் நிலைப்பாட்டை ஏற்றுத் தமிழ் மக்கள் இதுவே தமது பொது நிலைப்பாடு என்று உலகுக்கும் தென்னிலங்கைக்கும் வெளிக்காட்ட பொதுக் கட்டமைப்பின் பொது வேட்பாளராகிய பா.அரியநேத்திரன் அவர்களுடைய சங்குச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று அன்புரிமையோடு வேண்டி நிற்கின்றோம்.
பொதுவேட்பாளர் ஜனாதிபதியாக வருவதற்காக முன் நிறுத்தப்படவில்லை. அவர் தமிழ் மக்களை ஒன்று திரட்டுவதற்காகவும், கட்சிகளை ஒன்றிணைப்பதற்காகவும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒருமித்த குரலில் ஒலிக்கச் செய்வதற்காகவுமே முன் நிறுத்தப்படுகிறார். ஒன்று திரண்ட தமிழ் மக்கள் உலகத்தின் முன்னும் தென்னிலங்கையின் முன்னும் பலமாக நிமிர்ந்து நிற்பார்கள்.
அதாவது அரியநேத்திரன் அவர்களுக்கு வழங்கப்படும் வாக்குகள் தமிழ்மக்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கும் வாக்குகள்தான். தமிழ் மக்களின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்தவர்களைக் கௌரவிக்கும் வாக்குகள்தான். எனவே தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது தமிழ் மக்களின் தேசியக் கடமையாகும். சங்குச் சின்னத்துக்கு ஆகக்கூடிய தமிழ் வாக்குகளை வழங்குவதன் மூலம் அன்பான தமிழ் மக்களே எங்களை நாங்களே வெற்றி பெற வைப்போம்.