‘மலையகத்தில் ஏற்பட்டுள்ள அறிவார்ந்த அரசியல் இடைவெளியை நிரப்ப அடுத்த தலைமுறையினர் முன்வரவேண்டும்’

மலையகத்தின் பிரதிநிதித்துவ அரசியல் அறிவார்ந்த ரீதியாகவே ஆரம்பமானது. உரிமையை முன்னிறுத்திய அந்தப் பயணத்தை சலுகைகளை முன்னிறுத்திய பேரம்பேசும் அரசியலாக மாற்றி அமைத்ததன் விளைவாக மலையக அரசியல் போக்கே வேறு திசையில் சென்றது. மலையகத்தில் ஏற்பட்டுள்ள அறிவார்ந்த அரசியல் இடைவெளியை நிரப்ப அடுத்த தலைமுறையினர் முன்வரவேண்டும் என முன்னாள் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்து உள்ளார்.

மலையக காந்தி என போற்றப்பட்ட முன்னாள் நாவலப்பிட்டி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே. ராஜலிங்கத்தின் 112 ஆவது பிறந்ததின நினைவேந்தலும், அவரின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘தீனர்களின் தொண்டன் கே . இராஜலிங்கம்’ நூல் அறிமுக நிகழ்வும் 19/12/2018 இன்று புசல்லாவ சங்குவாரி ‘ இராஜலிங்கம் இலத்தில்’ நடைபெற்றது.

மலையக அரசியல் அரங்கத்தின் பிரதான அமைப்பாளர் ஆர். செய்தூரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ராஜலிங்கம் குடும்ப உறுப்பினர் எஸ். ராஜலிங்கத்திடம் இருந்து ‘தீனர்களின் தொண்டன் – கே. இராஜலிங்கம்’ எனும் நூலின் ஐம்பது பிரதிகளை மலையகம் அரங்கம் சார்பாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் மயில்வாகனம் திலகராஜ் பெற்றுக்கொண்டார்.

பாடசாலை அதிபர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பயிற்சி ஆசிரியர்கள், தொழிலதிபர்கள், தொழிற்சங்கவாதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

கண்டி – நுவரெலியா வீதி அருகே சங்குவாரி தோட்டத்தில் அமைந்த கே. ராஜலிங்கம் சமாதி அருகே இடம்பெற்ற அஞ்சலி இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே திலகர் மேற்படி கருத்தினைத் தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

அமரர் கே. இராஜலிங்கம் தொடர்பான அரிய பல தகவல்களை அவரது நண்பரான தமிழக வழக்கறிஞர் ஆலம்பட்டு சோ. உலகநாதன் எழுதியுள்ள இந்த நூல், அரிய பல தகவல்களையும் புகைப்படங்களையும் கொண்டுள்ளது. தமிழக்தில் கே. இராஜலிங்கம் நினைவாக புத்தகம் ஒன்று வெளிவந்துள்ள போது குறைந்தபட்சம் அதனைக் கொள்வனவு செய்து மக்கள் மயப்படுத்தும் கடமை நமக்கு உள்ளது. அதனையே மலையக அரசியல் அரங்கம் நிறைவேற்றுகிறது.

இருநூறாண்டுகால மலையக பிரதிநிதித்துவ அரசியல் ஆரம்பத்தில் அறிவார்ந்த ரீதியாக செயற்பட்டது என்பதன் அடையாளங்களில் ஒன்றாக கே. ராஜலிங்கம் அவர்களை நாம் பார்க்க முடியும்.

இந்திய பிரதமர் நேரு இலங்கை வந்து உரையாற்றியபோது அதனை தமிழில் மொழிபெயர்த்தவர் கே. இராஜலிங்கம். 1950 களிலேயே ஜெனிவா சென்று மலையக மக்களின் பிரச்சினைகளை சர்வதேசத்திடம் முன்வைத்துள்ளார். எனினும் பின்னாளில் மலையக அரசியல் பேரம்பேசும் சலுகை அரசியலுக்கு தடம் மாறியதன் காரணமாக அறிவார்ந்த அரசியல் முன்னெடுப்புகளுக்கு இடம் இல்லாது போனது. மக்கள் அடிமை நிலைமைக்கு தள்ளப்பட்டார்கள்.

அண்மையில் இலங்கை வந்த ஐ.நா அறிக்கையாளர், மலையகத் தமிழர் இலங்கையில் அடிமை நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதை உறுதி செய்து அறிக்கை வழங்கியுள்ளார். இதனை மாற்றியமைக்க மலையகத்தின் அடுத்த தலைமுறையினர் அறிவார்ந்த அரசியல் தளத்தை அமைக்க முன்வருதல் வேண்டும். அதனை இலக்காகக் கொண்டே மலையக அரசியல் அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

மலையகத்தில் அறிவார்ந்த அரசியலை முன்வைத்தவர்களை இளைய தலைமுறையினருக்கு அடையாளம் காட்டுவதுடன், நடைமுறை அரசியல் சார்ந்த விடயங்களை முன்வைத்து மாதாந்த உரை நிகழ்வுகளையும் ஒழுங்கு செய்து அதனை அவர்களின் நினைவுப் பேருரையாக ஆவணமாக்கும் பணிகளையும் செய்து வருகிறது.

அந்த வகையில் கே. இராஜலிங்கம் நினைவுப் மேலையான “உத்தேச தேர்தல் முறைமை மாற்றமும் மலையகத் தமிழர் மீதான அதன் தாக்கமும்” எனும் தலைப்பில் எதிர்வரும் 26 ஆம் திகதி தேர்தல் முறைமை மாற்றத்துகங்கான பாராளுமன்ற தெரிவிக்குழு வின் தொழிநுட்ப குழு உறுப்பினரும் மலையகக் கல்வியாளருமான பா. கௌதமன் நிகழ்த்த உள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles