” மலையகத்தில் முன்னாள் அமைச்சர் திகாம்பரம் காலத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட தனி வீட்டுத் திட்டமா ? அல்லது ஏற்கனவே தோல்வி கண்ட மாடி வீட்டுத் திட்டமா புதிய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படவுள்ளது என்பதை இந்த சபையில் கேட்க விரும்புகிறேன்.”
இவ்வாறு தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் வலியுறுத்தினார்.
வீடமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சின் மீதான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவரின் உரை வருமாறு,
” நமது நாட்டில் வாழும் சுமார் 15 லட்சம் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களை பிரதிநிதிதித்துவப்படுத்தி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு இல்லாத மலையக மக்கள் சம்மந்தமான அமைச்சின் மீதான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு குழு நிலை விவாத்த்தில் வேதனையுடன் உரையாற்றுவதாக இந்த உயரிய சபையில் தெரிவித்து கொள்கிறேன்.
அமைச்சரவையில் இருந்து மலையக மக்களின் பிரநிதித்துவத்தை இல்லாது செய்துள்ள இந்த அரசாங்கத்திற்கு நாம் எமது மன வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
மலையக மக்களின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு உருவாக்கப்பட்டது. பல தசாப்த காலமாக தோட்ட மக்கள் என்றே இவர்கள் அழைக்கப்பட்டு வந்தனர்.
ஆனால் கடந்த ஆட்சி காலத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் பலத்தால் இந்த சொற்பதம் மாற்றப்பட்டு மலையக மக்கள் என்று கௌரவத்துடன் அழைக்கக்கூடிய நிலை ஏற்படுத்தப்பட்டது. நல்லாட்சி அரசாங்காக கால வரவு செலவுத் திட்டம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களில் மலையக மக்கள் என்ற கௌரவப் பெயரே பயன்படுத்தப்பட்டது.
அது மாத்திரமன்றி மலைநாட்டு புதிய கிராமங்கள் என்று கௌரவ பெயர் கொண்டு புதிய அமைச்சு உருவாக்கப்பட்டு நான்கரை வருட காலத்தில் சாதனை படைக்கும் அளவுக்கு அபிவிருத்தி திட்டங்கள் முன்னேடுக்கப்பட்டன.
அமைச்சுக்கு ஒதுக்கிடப்படும் நிதியை முறையாகக் கையாள்வதில் முன்னாள் அமைச்சர் கௌரவ பழனி திகாம்பரம் அவர்கள் தலைமையில் மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சு விருது பெற்ற அமைச்சாக உச்சத்தில் இருந்தது. ஹட்டன் தொழிற்பயிற்சி நிலையமும் விருது பெற்றது.
ஆனால் இன்று மலைநாடு என்ற கௌரவ பெயர் நீக்கப்பட்டு மீண்டும் தோட்டம் என்ற நிலைக்கு மலையக மக்கள் கீழிறக்கப்பட்டுள்ளனர். அமைச்சின் பெயர் மாற்றத்தில் கூட அரசியல் காழ்ப்புணர்ச்சி காட்டப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத் திட்டங்களை தற்போது தடை செய்துள்ளனர்
கடந்த அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் ஒரு வருட காலமாக எவ்வித கட்டுமான பணிகளும் இன்றி முடங்கிக் கிடக்கிறது. கட்டி முடிக்கப்பட்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரம், குடிநீர் வசதிகள் இன்றி பூட்டிக் கிடக்கின்றன.
அது மாத்திரமன்றி இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஆரம்ப காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட இடங்களில் வீடுகளுக்கு பதிலாக புற்கள் முளைத்துள்ளன. மெராயாவில் 100 வீடுகள், நானுஓயாவில் 100 வீடுகள், பொகவந்தலாவையில் 100 வீடுகள் என அடிக்கல் நாட்டினர். 8 மாதங்கள் கடந்து இன்னும் வீடுகள் கட்டப்படவில்லை.
அப்படி இருக்கையில் இந்த வரவு செலவுத் திட்டத்தில் வீடமைக்கு என மிகவும் குறைந்தளவு நிதியே ஒதுக்கப்பட்டுள்ளதுமக்களுக்கு தனி வீடுகள் அமைக்கப்படும் என்று கூறுகின்றனர்.
Introducing Low Rise Housing schemes with the support of Estate owners
என மலையகத்திற்கு மாடி வீடுகள் அமைப்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தனி வீடுகள் கட்டப்படும் என மக்களுக்கு சொல்லப்படுவதன் உண்மைதன்மை என்ன ? இதில் பலந்த சந்தேகம் எழுகிறது.
.
எனவே மலையகத்தில் முன்னாள் அமைச்சர் திகாம்பரம் அவர்கள் காலத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட தனி வீட்டுத் திட்டமா ? அல்லது ஏற்கனவே தோல்வி கண்ட மாடி வீட்டுத் திட்டமா புதிய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படப் போகிறது என்பதை இந்த சபையில் கேட்க விரும்புகிறேன்.
மாடி வீடு கட்டுவதானால், மலையக மக்களின் காணி உரிமை எவ்வாறு உறுதிப்படுத்தப்படும் என்பதை அரசாங்கம் சபையில் அறிவிக்க வேண்டும்.
எத்தனை சதுர அடியில் ஒரு வீடு கட்டப்படும் என்பதையும், ஒரு வீட்டின் கட்டுமான பணிக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவும், எத்தனை பேர்சஸ் நிலத்தில் ஒரு வீடு கட்டப்படும் எனவும், இந்த உயரிய சபை ஊடாக மலையக மக்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் தெளிவு படுத்தவேண்டும்.
தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்ட 20 பேர்ச் காணியில் ஸ்லெப் போட்ட வீடுகள் எப்போது கட்டிக் கொடுக்கப்படும் என்பதை மலையக மக்கள் மிகவும் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் நான்காயிரம் வீட்டுத் திட்டமே இன்னும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இந்திய அரசாங்கத்துடன் செய்து கொள்ளப்பட்ட பத்தாயிரம் வீட்டுத் திட்டத்திற்கு என்ன நடந்தது?
அந்த வீடமைப்புத் திட்டம் தொடர்பில் எதுவும் கூறப்படவில்லை. அப்படியானால் அந்த பத்தாயிரம் வீடமைப்புத் திட்டம் கைவிடப்பட்டு விட்டதா?
ஏற்கனவே இந்த பத்தாயிரம் வீடுகள் கட்டப்பட வேண்டிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு இந்திய உயர்ஸ்தானிகருக்கு கடந்த ஆட்சி காலத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்க காலத்தில் மலையக மக்களை நிலவுடமை சமூகமாக மாற்றி 7 பேர் நிலத்திற்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டது. அந்த காணி உறுதிப் பத்திரத்தினை வெற்று கடதாசி என அரசாங்க தரப்பை சேர்ந்தவர்கள் சிலர் அண்மையில் கூறியுள்ளனர்.
எனவே குறித்த காணி உறுதிப் பத்திரம் பொய்யானது என்ற கருத்தை இராஜாங்க அமைச்சர் ஏற்றுக் கொள்கிறாரா? என்பதை இந்த சபையில் அறிவிக்க வேண்டும்.
அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்து உருவாக்கப்பட்ட மலையக அபிவிருத்தி அதிகார சபை தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடந்த வருடம் குறித்த அதிகார சபைக்கு வெறும் 63 லட்சம் மாத்திரமே ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வருடம் அதிகார சபைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அது தொடர்பில் வரவு செலவுத் திட்ட அறிக்கையில் எதுவும் கூறப்படவில்லை.
எல்லா அரச நிறுவனங்களுக்கும் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி விட்டு இந்த அதிகார சபைக்கு மாத்திரம் ஏன் இந்த பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது என்பது புரியவில்லை.
இந்த நாட்டின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்ட மலையக அபிவிருத்தி அதிகார சபைக்கு நிதி ஒதுக்கப்படாதது ஏன் என தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.
மலையக அபிவிருத்தி அதிகார சபையின் முதலாவது திட்டமாக நுவரெலியா ஸ்கரப் தோட்டத்தில் 50 வீடுகள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் அந்த வீடமைப்புத் திட்டம் கைவிடப்பட்டு மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மலையக அபிவிருத்தி அதிகார சபை என்பது மலையக மக்களுக்காக பெற்றுக் கொடுக்கப்பட்ட அரச நிறுவனம் ஆகும்.அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக இந்த மலையக அபிவிருத்தி அதிகார சபையை மெல்ல மெல்ல அழித்துவிட வேண்டாம் என இந்த சபையிலே கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
மலையக தொழிலாளர் குடும்பங்களுக்கு இன்று சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் வீடுகள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சுடன் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மலையகத்தின் அபிவிருத்திக்கென தயாரிக்கப்பட்ட ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்ட ஆவணத்தில் இவ்விடயம் கூறப்பட்டுள்ளது.
அப்படி இருக்கையில் கடந்த 2020ம் ஆண்டு இந்த அமைச்சின் ஊடாக புதிதாக ஒரு வீடேனும் கட்டப்படவில்லை. 2021ம் ஆண்டு வீடமைப்புக்கு என வெறும் 1622 மில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது.
(1522 மில்லியன் ரூபா தோட்ட மக்களின் வீடுகளுக்கான தேவையை பூர்த்தி செய்தல்) (100 மில்லியன் ருபா கிராம்ப் பிரதேசங்களில் வாழ்வாதார மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தல்)
இது மிகவும் குறைந்த ஒதுக்கீடாகும். மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை ஒரு இரண்டாம் தர பிரஜைகளாக கருதி இந்த அளவு குறைந்த தொகையை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாக என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வீடமைப்பு மாத்திரமன்றி குடிநீர், மின்சாரம், மலசலகூட வசதிகள், வீதி உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றுக்கான தேவை மலையகத்தில் அதிகமாகவே உள்ளது.
(714 மில்லியன் ரூபா பின்னடைந்த பிரதேச மக்களின் வாழ்க்கை தரத்தை கட்டியேழுப்புதல் ) இதில் 214 மில்லியன் ரூபா Hatton தொழில் பயிற்சி நிலையத்தை மேம்ப்படுத்தல் ஆகவே மிகுதி 500 மில்லியன் ரூபாவே பின்னடைந்த பிரதேசங்களில் சமூக பொருளாதார அபிவிருத்தியை எற்ப்படுத்தல்)
இந்த குறைந்தளவு நிதியை வைத்துக் கொண்டு மலையக மக்கள் வாழும் நுவரெலியா, பதுளை, கண்டி. கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை, மொனராகலை, குருநாகல் போன்ற மாவட்டங்களுக்கு எவ்வாறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்பதை இந்த தருணத்தில் கேட்க விரும்புகிறேன்.
எமக்குள் அரசியல், கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் எமது மலையக மக்களின் அபிவிருத்தியும் எதிர்காலமும் எமக்கு முக்கியமாகும். எனவே தோட்ட வீடமைப்பு உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த குறைந்தளவான நிதி தொடர்பில் அரசாங்கம் மீள் பரிசீலனை செய்து நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன்.










