மலையகத்தில் புதிய தொழிற்சங்கம் ஒன்று விரைவில் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளதாகத் தெரிய வருகின்றது.
கடந்த காலங்களில் பாரிய தொழிற்சங்கங்கள் மீது காணப்பட்ட குறைபாடுகள், அதிருப்திகள் காரணமாகவே புதிய தொழிற்சங்கத்தை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பழம்பெரும் பெரும் தொழிற்சங்கங்கள் தமது அமைப்புகளின் ஆரம்பகால உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுக்காமை, அரசியல் ரீதியில் அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை, தேர்தல் காலத்தில் போட்டியிட்ட நேரங்களில் வேண்டா வெறுப்பாக நடந்து கொண்டமை, அவர்களின் வெற்றிக்காக பிரசார நடவடிக்கைகளில் கட்சித் தலைமைகள் ஈடுபாடு காட்டாமை, சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காமை, கட்சியில் ஒரு சிலருக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்து சிரேஷ்ட உறுப்பினர்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டு ஓரங்கட்டப் பட்டமை உட்பட பல்வேறு கருத்து முரண்பாடுகளால் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகவே புதிய தொழிற்சங்கம் தோற்றம் பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், நகரசபை, பிரதேச சபை உறுபினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், அரசியலிலிருந்து ஒதுங்கியுள்ள சிரேஷ்ட உறுப்பினர்களான அனுபவசாலிகள், கல்வித்துறை சார்ந்தவர்கள், வர்த்தகர்கள், தோட்ட உத்தியோகத்தர்கள் போன்றோர் ஒன்றுகூடி தொழிற்சங்கத்தை உருவாக்கி பதிவு செய்யவும், அதை அரசியல் கட்சியாக பதிவு செய்யவும் யாப்புகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த மாதத்தில் பதிவுகள் இடம்பெறலாம் என்றும் தெரிய வருகின்றது.
எதிர்வரும் டிசம்பர் மாத இறுதிக்கும் பதிவு செய்யும் பணிகள் பூர்த்தியாகி, தொழிற்சங்க சந்தா அறவிட உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தம்மை ஓரங்கட்டிய கட்சிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் தகுந்த பாடத்தைப் புகட்ட மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை பி.கேதீஸ்
