மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் தொழில்துறை தெய்வ நம்பிக்கை நிறைந்தது.
இவர்கள் தொழில் செய்யும் இடங்கள் ஆரம்பத்தில் காடுகளாக இருந்தது.வேலைத்தலங்ஙள் அநேகமாக பள்ளம் மேடுகளாக ஆபத்துக்களை விளைவிப்பதாக இருந்தது. காடுகளை அண்டிய இடங்களில் வனவிலங்குகளின் அச்சுறுத்தல்கள் மற்றும் பல்வேறு இடர்பாடுகளை கொண்டதாக காணப்பட்டது
அதேபோல பெருந்தோட்ட பயிர்களான கோப்பி மற்றும் தேயிலை போன்றவற்றை பதனிடும் தொழிற்சாலைகளும் பாரிய இயந்திரங்களை கொண்டதாகவும் பாதுகாப்பற்றதாவும் இருந்தது.
இந்த ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பை பெரும் பொருட்டு தோட்டத்துக்குள்ளேயும் தோட்ட எல்லையிலும்,மரத்தடியிலும்,நீர்நிலைகளிலும்,மலையடிவாரத்திலும் மட்டுமன்றி பாரிய தொழிற்சாலைகளுக்கு அருகிலும் வழிபாட்டு தலங்களை அமைத்துக் கொண்டனர்.
தேயிலை தொழிற்சாலை அமைந்துள்ள இடங்களில் அல்லது அதற்கு அருகில் அநேகமாக ரோதமுனி ஆலயங்கள் இருப்பதை காணலாம்.
தேயிலை தொழிற்சாலை என்பது தொழிலாளர்கள் கிள்ளும் கொழுந்தை பதனிட்டு தூளாக அரைக்கும் பாரிய இயந்திரங்களை கொண்டது.பெரிய ரோதைகளால் ஆனது.மிக கவனமாக அந்த இயந்திரங்களை இயக்க வேண்டும் தவறினால் பாரிய விபத்துக்கள் ஏற்படும்.அவ்வாறு விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவங்களும் பல உள்ளன.அவ்வாறான விபத்துக்களில் இருந்து பாதுகாப்பை பெரும் பொருட்டு அந்த ரோதைகளோடு சம்பந்தப்பட்ட பெயர்கொண்ட ரோதமுனி ஆலயஙளை நம் முன்னோர்கள் அமைத்து வழிபட்டனர்.தேயிலை தொழிற்சாலையை நம்மவர்கள் ஸ்டோர் என்றும் பெரும்பாலும் அழைப்பதுண்டு.அவ்வகையில் ஸ்டோரிலே வழிபடப்படும் இந்த சாமியை”ஸ்டோர் சாமி”என்று அழகாக அழைத்தனர் .
ஸ்டோரில் சாமி கும்பிடுவதென்பது இங்கு பணிப்புரிபவர்களுக்கு அத்தனை சந்தோசம்.தினமும் உழைப்பதும் உண்பதும் என்ற வாழ்க்கைக்கு அப்பால் இந்த பூசையில் முழு மனதோடு ஆர்வம் காட்டுவார்கள்.
வருடத்திற்கு ஒரு முறை இந்த விசேட பூசை நடக்கும். தொழிலாளர்களோடு நிர்வாகத்தினரும் கைகோர்த்து தொழிற்சாலையையும் இயந்திரங்களையும் சுத்தம் செய்து அதனோடு ஆலயத்தையும்
அழங்கரித்து பூசையை மெருகூட்டுவார்கள்.பூசையை நமது பாரம்பரிய முறையிலேயே செய்வார்கள்.பூசை முடிவில் தொழிற்சாலை வளகாத்தில் இருந்து அமர்ந்து ஒன்றாக உணவருந்துவது வேறு எந்த நட்சத்திர விடுதிகளிலும் கிடைக்காத சுகம்.
எழுத்து (அ.ரெ.அருட்செல்வம்)