பதுளை மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 477 குடும்பத்தைச் சேர்ந்த 1912 பேர் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக, பதுளை மாவட்ட அரச அதிபர் தமயந்தி பரணகமை தெரிவித்தார்.
சீரற்ற காலநிலையினால் பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தங்கள் குறித்து பதுளை அரச அதிபரிடம் வினவிய போதே, அவர் மேற்கண்ட தகவல்களை வழங்கினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
‘பதுளை மாவட்டத்தில், பதுளை, ஹாலி-எலை, எல்ல, வெலிமடை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் 369 வீடுகள் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளன. பாதிக்கப்பட்டிருக்கும் 1912 பேருக்கு பிரதேச, செயலகங்கள் டாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார்’ என்று கூறினார்.
சீரற்ற காலநிலையினால், பசறைப்பகுதியின் ஒன்பதாவது மைல் கல்லருகே, வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 44 வயது நபர் வெள்ள நீரில் அள்ளுண்டு சென்றுள்ளார். பிரதேச மக்களினால் மீட்கப்பட்ட அவர் பசறை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும், சிகிச்சை பயனின்றி, அந் நபர் மரணமானார். அவரே பதுளை மாவட்டத்தில் மரணமானவராவார். இவரது சடலம் பசறை மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின் கிராம சேவையாளர்கள் ஊடாக பாதிப்பு விபரங்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாவட்டத்தின் அப்புத்தளை, பெரகலை, ஹல்துமுள்ளை பகுதிகளில் பனிமூட்டங்கள் அதிகரித்திருப்பதினால், வாகன சாரதிகள் மிகுந்த எச்சரிக்கைகளுடன் வாகனங்களை செலுத்துமாறு, பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் வாகன சாரதிகளைக் கேட்டுள்ளனர்.

மேலும், எல்ல – வெள்ளவாயா பிரதான பாதையில் பாரிய மண், கல் சரிவொன்று இடம்பெற்றுள்ளது. இதனால், வாகனப் போக்குவரத்துக்களுக்கு பெரும் தடை ஏற்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
எம். செல்வராஜா, பதுளை
